என்னமா ஆடுறாரு.. இவருக்கு எப்படி பௌலிங் போடுறது.. நினைச்சாலே பயமா இருக்கு.. மெர்சல் ஆன மலிங்கா!!
Recommended Video
மும்பை : இந்திய அதிரடி வீரர் ஹர்திக் பண்டியா ஆட்டத்தை பார்த்து மிரண்டு போயுள்ளார் இலங்கை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான மலிங்கா.
2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் ஏழாவது தோல்வியை அடைந்துள்ளது. ஆறு தோல்விகளுக்குப் பின் ஒரே வெற்றி பெற்ற பெங்களூர்அணி மீண்டும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பண்டியா அந்த எண்ணத்தை சுக்கல், சுக்கலாக நொறுக்கினார்.

2 ஓவர்களில் 22 ரன்கள்
இந்த ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 171 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை அணி கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடி வந்தது.

பண்டியாவின் அதிரடி ஆட்டம்
அப்போது களத்தில் இருந்த அதிரடி பேட்ஸ்மேன் பண்டியா, சுழற் பந்துவீச்சாளர் நெகி வீசிய 19வது ஓவரில் 2வது பந்து முதல் 5வது பந்து வரை தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். அதில் 2 சிக்ஸர், 2 ஃபோர் அடங்கும். அதே ஓவரில் 22 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார் பண்டியா.

பயமாக இருக்கிறது
ஹர்திக் பண்டியா 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதைக் கண்ட சக மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா, போட்டிக்கு பின் அளித்த பேட்டியில், எப்படி நன்றாக ஆடுகிறார்! அவருக்கு உலகக்கோப்பையில் எப்படி பந்து வீசுவது என நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றார்.

ஏன் உலகக்கோப்பை?
மேலும், ஹர்திக் பண்டியா விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்த முயல வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஐபிஎல்-இல் ஏன் உலகக்கோப்பை பற்றி பேசுகிறார் மலிங்கா? இலங்கை அணியின் மூத்த வீரராக மலிங்கா உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளார். கேப்டனாக அவர் பொறுப்பேற்கவும் அதிக வாய்ப்புள்ளது.

உலகக்கோப்பை தயார்நிலை
தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வந்தாலும், அனைத்து நாடுகளும் உலகக்கோப்பை அணிகளை அறிவித்து பயிற்சிகளை தொடங்க உள்ளது. ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஐபிஎல்-லை தாண்டி உலகக்கோப்பை குறித்து சிந்தித்துள்ளார் மலிங்கா.


Click it and Unblock the Notifications