
ஐபிஎல் புதுமைகள்
13வது சீசனை எட்டி உள்ள ஐபிஎல் தொடரில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரைப் பார்த்து மற்ற நாடுகள் தங்கள் ஊரில் டி20 தொடரை வடிவமைத்து வருகிறார்கள்.

வீரர்கள் கடன்
ஐபிஎல் தொடர் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிற விளையாட்டுத் தொடரின் அடிப்படையில் தான் விதிமுறைகளை வகுத்து வருகிறது. அந்த வகையில் தான் வீரர்களை கடன் வாங்கும் நடைமுறையும் உருவாகி இருக்கிறது.

அமலுக்கு வந்தது
கால்பந்து தொடர்களில் ஒரு அணி, மற்ற அணியிடம் அதிகம் பயன்படுத்தப்படாத வீரரை கடன் வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு. அதே நடைமுறை கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் அமலுக்கு வந்தது. ஆனால், அது முழுமையானதாக இல்லை.

முழுமையாக இல்லை
சர்வதேச போட்டிகளில் இடம் பெறாத வீரர்களை கடன் வாங்க மட்டுமே அப்போது அனுமதிக்கப்பட்டது. அதை எந்த ஐபிஎல் அணியும் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் அதை முழுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ அறிக்கை
பிசிசிஐ ஒரு அறிக்கையை எட்டு ஐபிஎல் அணிகளுக்கும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 2020 ஐபிஎல் தொடரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் முதல் நோ-பால் குறித்து மூன்றாவது அம்பயர் முடிவு எடுப்பார் என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச, வெளிநாட்டு வீரர்கள்
மேலும், கடந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களை கடன் பெற்றுக் கொள்ள மட்டுமே அனுமதித்த நிலையில், இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களையும் கடன் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சில விதிமுறைகள்
ஆனால், இதில் சில விதிமுறைகளும் உள்ளன. முதல் பாதி லீக் ஆட்டங்கள் முடிவடைந்த உடன் தான் வீரர்களை கடன் வாங்கிக் கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி கிடைக்கும். அதாவது, தொடரின் 28வது போட்டி முடியும் போது அனைத்து அணிகளும் ஏழு போட்டிகளில், ஏழு அணிகளையும் தலா ஒரு முறை சந்தித்து இருக்கும்

அனுமதி கிடைக்கும்
அதன் பின், 28வது போட்டி முடிந்த மறுநாள் காலை 9 மணி முதல் வீரர்களை கடன் வாங்கிக் கொள்ள அணிகளுக்கு அனுமதி கிடைக்கும். அப்போது இரண்டு அல்லது அதற்கும் குறைவான போட்டிகளில் ஆடிய வீரர்கள் மற்றும் மாற்று வீரர்களை மட்டுமே மற்ற அணிகளால் கடன் பெற முடியும்.

வீரர்கள் சம்பளம்
இந்த திட்டத்தால் 2020 ஐபிஎல் தொடரில் பல வீரர்களை அணிகள் கடன் வாங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையில் கடன் வாங்கப்படும் வீரர்களின் சம்பளத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ, கடன் வாங்கும் அணி செலுத்தும்.

தோனி முடிவு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே எந்த வீரரையாவது கடன் வாங்குமா? தோனி என்ன முடிவு எடுப்பார்? இப்பவே கண்ணை கட்டுதே!