பிளான் போட்டார்.. போட்டிக்கு நடுவே வார்னருக்கு உதவிய மாஸ்டர்மைண்ட்.. சிஎஸ்கேவை காலி செய்தது இவர்தான்
துபாய்: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெல்வதற்கு பின் வார்னரின் கேப்டன்சி மட்டும் காரணம் இல்லை. அவருக்கு பின் இன்னொரு முக்கியமான வீரரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே போராடி தோல்வி அடைந்தது. தொடக்கத்தில் ஆட்டம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் போக போக ஹைதராபாத் நிகழ்த்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சிஎஸ்கே வீழ்ந்தது.
முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய சென்னை 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

வார்னர் எப்படி?
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து வார்னரின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. முதலில் சென்னைக்கு எதிராக இவர் பேட்டிங் தேர்வு செய்ததே பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. அதேபோல் நேற்று மிக சிறப்பான பவுலிங் ரொட்டேஷனை வார்னர் கொடுத்தார். பவுலர்களை மாற்றி மாற்றி பவுலிங் செய்ய வைத்தார்.

திணறல்
கேதார் ஜாதவ் திணறுகிறார் என்று தெரிந்ததும் அவரை வைத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். தோனி களமிறங்கிய போது ரஷீத் கான் போன்ற ஸ்பின் பவுலர்களை களத்திற்கு கொண்டு வந்து, தோனியை திணற வைத்தார். அதேபோல் நேற்று போட்டியில் கடைசி பவர் பிளேவில் இவர் பீல்டிங் செட் செய்த விதமும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

பீல்டர்கள்
15 ஓவருக்கு பின் தோனி அடிப்பார் என்று தெரிந்து லாங் ஆன், லாங் ஆப் திசையில் பீல்டர்களை நிறுத்தினார். இதனால் தோனி பவுண்டரி அடிப்பது கூட தடுக்கப்பட்டது. இதெல்லாம் போக போட்டிக்கு நடுவில் புவனேஷ்வர் குமார் 19வது ஓவரில் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் மீதம் இருக்கும் பந்துகளை யார் போடுவது என்று குழப்பம் வந்தது.. கடைசி ஓவர் போடலாம் என்று இருந்த கலீல் அஹமத்திற்கு 19வது ஓவரின் மீது பந்துகளை கொடுத்தார் வார்னர்.

புதிய பவுலர்
துணிச்சலாக கடைசி ஓவரை சமாத் என்ற புதிய ஸ்பின் பவுலருக்கு கொடுத்தார். இந்த போட்டியில் வார்னரின் கேப்டன்சி சிஎஸ்கே தோல்வி அடைய முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் இவரின் கேப்டன்சி சரியில்லை. திடீர் என்று இவரின் கேப்டன்சி நன்றாக மாற கேன் வில்லியம்சன்தான் காரணம் என்கிறார்கள்.

வார்னர் எப்படி
கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குள் வந்ததில் இருந்து வார்னர் அவரிடம் டிப்ஸ் கேட்டு வருகிறார். இதனால் ஹைதராபாத் அணியும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்று போட்டியிலும் வார்னர் அடிக்கடி கேன் வில்லியம்சனிடம் டிப்ஸ் கேட்டார். ஓவர் மாற்றும் முன் யாருக்கும் ஓவர் கொடுக்கலாம் என்பது குறித்து டிப்ஸ் கேட்டார்.

கேன் வில்லியம்சன்
அதோடு கடைசியில் புவனேஷ்வர் குமார் வெளியேறிய நிலையில் யாருக்கு ஓவர் கொடுக்கலாம் என்பதற்கும் கேன் வில்லியம்சன் அறிவுரையைதான் வார்னர் வாங்கினார். தலைவர் இவர்தான்.. ஆனால் செயல் தலைவர் நான் என்பது போல கேன் வில்லியம்சன் செயல்பட்டார். நேற்று சிஎஸ்கேவை கட்டுப்படுத்த பல இடங்களில் கேன் வில்லியம்சன் கொடுத்த டிப்ஸ்தான் உதவியது.

காரணம் கேன் வில்லியம்சன்
இவர்தான் சென்னையை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர். போட்டியின் போக்கையே இவர்தான் மாற்றினார் என்று கூறுகிறார்கள். வார்னருக்கு பின் இருக்கும் மாஸ்டர்மைண்ட் கேன் வில்லியம்சன்தான். இனி அவரின் திட்டங்களை எதிர்கொள்ளவே பிற அணிகள் தயாராக இருக்க வேண்டும்!


Click it and Unblock the Notifications