அடிப்பாங்கன்னு தெரியும்.. தெரிஞ்சே பந்தை கொடுத்த கேப்டன்.. போய் அடி வாங்கி வந்த பவுலர்!
அபுதாபி : பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி கேப்டன் கேஎல் ராகுல் நிறைய ரன் வாரி இறைக்கப் போகிறார் என தெரிந்தே ஒரு பந்துவீச்சாளருக்கு மீண்டும் ஓவர் கொடுத்தார்.
ஜேம்ஸ் நீஷம் தான் அந்த பந்துவீச்சாளர். மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி ஆட்டம் தான் ஆடப் போகிறது என தெரிந்த பின்னும் பஞ்சாப் அணியால் அவர்களை தடுக்க முடியவில்லை.
இதில் ஜேம்ஸ் நீஷம் நிலை தான் பரிதாபம். முதல் இரண்டு ஓவர்கள் சிறப்பாக வீசிய அவர், அடுத்த இரண்டு ஓவர்களில் மோசமான நிலையை அடைந்தார். அதிக ரன்களை வாரி இறைத்து இருந்தார். ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா அவர் ஓவரில் ரன் மழை பொழிந்தனர்.

இப்படி ஒரு சம்பவம் ஐபிஎல் போட்டிகளில் எப்போதாவது நடக்கும். ஒரு அணியின் கேப்டன் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை ஆடும் லெவனில் தேர்வு செய்யும் போது ஒரீரு பந்துவீச்சாளர்களை எதிரணி குறி வைத்து அடித்து ரன் குவித்தால் அந்த அணியால் எதுவும் செய்ய முடியாது.
கேப்டன் பந்தை அதே பந்துவீச்சாளரிடம் தான் கொடுக்க வேண்டும். அப்படித் தான் தவறு செய்தார் கேஎல் ராகுல். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தார். மும்பை இதை வைத்தே கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆட திட்டம் போட்டது.
15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஜேம்ஸ் நீஷம் அப்போது 2 ஓவர்களை வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். இந்த நிலையில் 16வது ஓவரை அவருக்கு அளித்தார் ராகுல்.
அந்த ஓவரில் ரோஹித் சர்மா 2 ஃபோர், 2 சிக்ஸ் அடித்தார். அவரது அதிரடியால் அந்த ஓவரில் மட்டும் மும்பை 22 ரன்கள் குவித்தது. நீஷம் ஓவரில் எளிதாக ரன் அடிக்கிறார்கள் எனத் தெரிந்தும் 18வது ஓவரை அவருக்கே அளித்தார் ராகுல்.
மீண்டும் நீஷமுக்கு ஓவர் அளிக்க காரணம் அணியில் வேறு பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது தான். எப்படியும் அடித்து ஆடுவார்கள் எனத் தெரிந்தும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ராகுல். 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 1 சிக்ஸ், 2 ஃபோர் அடித்தார்.
18வது ஓவரில் 18 ரன்கள் கொடுத்தார் நீஷம். 2 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து இருந்த அவர் 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்து இருந்தார். மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications