"அவர் விக்கெட்டை எடுக்கணும்".. தோனியை வீழ்த்தி கனவை நினைவாக்கிய நடராஜன்.. அஸ்வினின் உருக்கமான பதில்!
துபாய்: சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தி தமிழக வீரர் நடராஜன் தனது கனவை நினைவாக்கி உள்ளார்.
2020 ஐபிஎல் தொடரின் சிறப்பான கண்டுபிடிப்பாக தமிழக வீரர் நடராஜன் உருவெடுத்துள்ளார். ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர் தனது பவுலிங் மூலம் தற்போது உலகம் முழுக்க பிரபலம் ஆகியுள்ளார். அதிலும் இவர் போடும் யார்க்கர் பந்துகள் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சிறப்பு
ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் யார்க்கர் போடும் திறமை கொண்ட வீரராக நடராஜன் உருவெடுத்துள்ளார். அதிலும் 6 பந்துகளையும் 145 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வீசும் திறமை கொண்டவராக நடராஜன் இருக்கிறார். பவுலிங் ஜாம்பவான் பிரிட்லீ தொடங்கி பல கிரிக்கெட் வல்லுநர்கள் நடராஜனின் பவுலிங்கை பார்த்து வியந்து உள்ளனர்.

வியப்பு
இந்த சீசன் முழுக்க இதுவரை நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி உள்ளார். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இன்னொரு மூத்த வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு இவர் பேட்டி அளித்து இருந்தார். தனது கிரிக்கெட் பயணம் குறித்தும், இந்தி தெரியாமல் தான் கஷ்டப்பட்டது குறித்தும் நடராஜன் பேசி இருந்தார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில்.. கிரிக்கெட்டில் யாருடைய விக்கெட்டை எடுப்பதை சாதனை என்று நீங்கள் கருதுவீர்கள் என்று நடராஜானிடம் அஷ்வின் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த நடராஜன்..எனக்கு தோனி விக்கெட்டை எடுக்கணும். எனக்கு அவர் விக்கெட்டை எடுக்கணும்.. அதுதான் சாதனை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இன்று விக்கெட்
இந்த நிலையில் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் நடராஜன் தோனி விக்கெட்டை எடுத்து தனது கனவை நினைவாக்கி உள்ளார். தனது கடைசி ஓவரை வீச நடராஜன் களத்திற்கு வந்தார். அந்த ஓவரில் தோனி விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் இனி அவரின் விக்கெட்டை எடுப்பது நடராஜனுக்கு மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும். அந்த ஓவரின் 5வது பந்தில் தோனி 102 மீட்டர் சிக்ஸர் ஒன்றை அடித்தார்.

சிக்ஸர்
இந்த நிலையில் அடுத்த பந்தே தோனிக்கு நடராஜன் லோ புல் டாஸ் போட்டார். இதை கணிக்க முடியாமல் இழுத்து அடித்த தோனி, கவர் திசையில் இருந்த கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சின்னப்பம்பட்டி தமிழர் நடராஜன் தனது கனவு விக்கெட்டான தோனியின் விக்கெட்டு எடுத்துவிட்டு.. மிகவும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி கொண்டாடினார்.

அஸ்வின்
இதை தற்போது இணையமே கொண்டாடி வருகிறது. நடராஜன் தனது கனவை நினைவாக்கிக் கொண்டார் என்று இணையத்தில் நடராஜனை கொண்டாடி வருகிறார்கள். அஸ்வின் தனது டிவிட்டில் .. சிறப்பாக செய்தீர்கள் நடராஜன்.. உங்கள் வாழ்க்கையில் இது மிக முக்கியமான நிகழ்வு, என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications