அவனை சீக்கிரம் இந்தி கத்துக்க சொல்லு.. நடராஜனிடம் சொன்ன சேவாக்.. என்ன நடந்தது? - முழு பின்னணி
துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜன் தனது கிரிக்கெட் பயணம் குறித்து சுவாரசியமாக பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். இவர் பேசிய வீடியோவை ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
2020 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். சேலத்தை சேர்ந்த இவர் தற்போது ஹதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒரு ஓவரில் 6 பந்தும் யார்க்கர் பந்தாக போட்டு இவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரிட்லீயின் கவனத்தையே ஈர்த்து இருக்கிறார். இவரின் சிறப்பான பவுலிங் காரணமாக இந்திய அணியில் இவருக்கு விரைவில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் தனது பயணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவன். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். என் அப்பா நெசவு தொழில் செய்து வருகிறார். அம்மா சாலை ஓரத்தில் சிக்கன் கடை வைத்து இருக்கிறார். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்துதான் நான் வந்து இருக்கிறேன்.

பயணம்
அரசு பள்ளியில் படிக்கும் போது பென்சில், நோட் வாங்க கூட காசு இல்லை. சின்ன வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். முதலில் டென்னிஸ் பாலில்தான் ஆடினேன். அதன்பின் அண்ணன் உதவியுடன் சென்னையில் 4வது டிவிஷன் போட்டிகளில் ஆடினேன். எங்காவது செல்ல வேண்டும் என்றாலும் கூட என்னிடம் காசு இருக்காது. ஷூ வாங்க காசு இல்லை. சட்டை எடுக்க காசு இல்லை.

வறுமை
அணியில் ஸ்பான்சர் மூலம்தான் ஷூ, ஜெர்சி எல்லாம் எனக்கு கிடைத்தது. எனக்கு ரஞ்சி ஆட வேண்டும் என்று ஆசை. அண்டர் 19, அண்டர் 16 போன்ற போட்டிகளில் ஆடிதான் எல்லோரும் ரஞ்சி ஆடுவார்கள். ஆனால் நான் நேரடியாக ரஞ்சி ஆடினேன். எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. 2014ல் நான் ரஞ்சிக்கு தேர்வானேன்.

ஆனால் முதல் போட்டி
ஆனால் என்னுடைய முதல் போட்டியிலேயே என் பவுலிங் தவறாக இருக்கிறது என்று தடை செய்துவிட்டனர். என் பவுலிங் ஆக்சன் சரியில்லை என்று கூறி தடை செய்துவிட்டனர். அதன்பின் ஒரு வருடம் கஷ்டப்பட்டேன். ஒரு வருடமாக கஷ்டப்பட்டு என் பவுலிங் ஆக்சனை மாற்றினேன்.ஒரு வருடம் கழித்து கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்தேன்.

சேவாக்
அந்த ஒரு வருடம் என்னை பலர் என்கரேஜ் செய்தனர். அதன்பின் எனக்கு டிஎன்பிஎல்தான் அடையாளம் கொடுத்தது. நடராஜன் என்றால் டிஎன்பிஎல் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அதன்பின்தான் எனக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் வாய்ப்பு கிடைத்தது. பயங்கர சந்தோஷமாக இருந்தது. என்னை பெரிய தொகை கொடுத்து எடுத்தனர். எனக்கு இதனால் பெரிய அழுத்தமாக இருந்தது.

இந்தி
ஐபிஎல்லில் என்னை தொடக்கத்தில் சேவாக் இந்தி கற்றுக்கொள்ளும்படி கூறினார். அவனை சீக்கிரம் இந்தி கத்துக்க சொல்லு என்று பார்க்கும் போது கூறுவார். கடந்த ஐபிஎல் சமயத்தில் எனக்கு காலில் பெரிய சர்ஜரி நடந்தது. இதனால் விளையாட முடியாமல் போனது. இதனால் கடுமையாக கஷ்டப்பட்டேன். அதன்பின் ஹைதரபாத் அணியில் எடுத்தனர்.

புவனேஷ்வர்குமார்
ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர்குமார், முத்தையா முரளிதரன் என்று எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் எப்படி ஆட வேண்டும். எப்படி சுயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு பயிற்சியாளர்கள் அறிவுரை வழங்கினார்கள். டென்னிஸ் பால்தான் என்னுடைய சீக்ரெட். எனக்கு வேறு சீக்ரெட் எதுவும் இல்லை. இப்போதும் அதுதான் கை கொடுக்கிறது. என் குடும்பத்தில் தம்பிகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே என் கனவு, என்று நடராஜன் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications