இது சாதராண விஷயமல்ல.. பாதியில் துடித்த ஏபிடி.. மூச்சு விடவே கஷ்டப்பட்ட தோனி.. என்ன நடக்கிறது?
துபாய்: ஐபிஎல் தொடரில் நேற்று போட்டிக்கு இடையே தோனி கடுமையாக திணறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள், ஆர்வலர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மோசமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் எப்போதும் போல சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் மோசமாக சொதப்பினார்கள்.
பிரஷர் முழுக்க கடைசியில் இருந்த வீரர்கள் மீது விழுந்தது. கடைசியில் பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருந்த காரணத்தால் தோனி, சாம் கரன் போன்ற வீரர்களால் பெரிய அளவில் ஷாட்களை அடிக்க முடியவில்லை.

என்ன நடந்தது
இந்த போட்டியில் தோனி சிக்ஸ் அடிக்க முயன்றும் முடியவில்லை. அவரின் எனர்ஜி மொத்தமும் காலியாகி கடுமையாக சிரமப்பட்டார். அதிலும் நேற்று பாதி போட்டிக்கு பிறகு அவரால் மூச்சு விடவே முடியவில்லை. பாதியில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு சென்றார்.

மோசம்
எப்போதும் தோனி இவ்வளவு களைப்பாக இருந்தது இல்லை. ஆனால் நேற்று வெளிப்படையாக களைப்பாக காணப்பட்டார். அதோடு பேட்டை கீழே ஊன்றி, மூச்சு வாங்கி ஓய்வு எடுத்தார். இவர் இப்படி கஷ்டப்பட்டது ரசிகர்களுக்கு கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியது.

வில்லியர்ஸ்
இதற்கு முன் பெங்களூர் வீரர் டி வில்லியர்ஸ் இதேபோல் ஆட்டத்தின் பாதியில் துடித்துப் போனார். மும்பைக்கு எதிரான போட்டியின் போது போட்டி முழுக்க ஏபி டிவில்லியர்ஸ்தான் பெங்களூருக்காக கீப்பிங் செய்தார். இதனால் அவர் மிக மோசமான களைப்பில் இருந்தார். போட்டிக்கு நடுவே உடலில் நீர் சத்தை இழந்து, கீப்பிங் கூட செய்ய முடியாமல் சிரமப்பட்டார்.

தண்ணீர் கொடுத்தனர்
இதனால் அவருக்கு பயிற்சியாளர் குழுவில் இருக்கும் சப்போர்ட் குழு ஆட்கள் வந்து குளுக்கோஸ் கொடுக்கும் நிலை கூட ஏற்பட்டது. 20 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு.. அதன்பின் சூப்பர் ஓவர் பிடிக்க டி வில்லியர்ஸ் வந்தார். ஆனால் கடுமையான களைப்பில் இருந்தவரால் பெரிய அளவில் அதிரடி ஷாட்களை ஆட முடியவில்லை. இதனால் போட்டி முடிந்த பின் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்க கூட ஏபிடி வரவில்லை.

வீரர்கள் இரண்டு
இவர்கள் இருவரும் மூத்த வீரர்கள் அதனால் விளையாட முடியவில்லை என்று இந்த விஷயத்தை புறந்தள்ள முடியாது. பெங்களூருக்கு எதிரான அதே போட்டியில் மும்பையின் இளம் வீரர் இஷான் கிஷான் களைப்பு காரணமாக சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வரவில்லை. இவர் போட்டிக்கு பின் அறையில் வாந்தி எடுத்ததாகவும் தகவல்கள் வந்தது. அந்த போட்டி முழுக்க இவர் மூச்சு விட கடுமையாக சிரமப்பட்டார்.

தோனி மட்டுமல்ல
அதனால் நேற்று தோனி சிரமப்பட்டது புதிய விஷயம் இல்லை. அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எல்லா வீரர்களும் சிரமப்படுகிறார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு உடனே தீர்வு காண வேண்டும். துபாயின் கடுமையான வெப்பநிலை காரணமாக வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். துபாயில் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது.

மோசம்
இதனால் வீரர்கள் மைதானத்தில் பேட்டிங், பீல்டிங் செய்யும் போது மிக கடுமையாக சிரமப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விளையாடுவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படிப்பட்ட சூழ்நிலையில் பகலில் இன்று ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications