
பஞ்சாப் -கேகேஆர் மோதல்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்தில் இந்த போட்டி தொடரின் முதல் போட்டியாக நடைபெறவுள்ளது. கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் வெற்றியை தொடர அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது.

அனைத்திலும் சொதப்பல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. அணியின் அனைத்து துறைகளிலும் சொதப்பலை வெளிப்படுத்தி வரும் இயான் மார்கன் தலைமையிலான இந்த அணியில் சுப்மன் கில் மற்றும் இயான் மார்கன் இருவரும் பேட்டிங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் அணிக்கு உள்ளது.

காத்திருக்கும் நரேன்
ஐபிஎல் வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை 27 முறை மோதிய நிலையில், கேகேஆர் 13 முறை வெற்றி பெற்று 9 முறை தோல்வி கண்டுள்ளது. இதனிடையே கேகேஆர் ஆல்-ரவுண்டர் சுனில் நரேன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உமேஷ் யாதவின் 29 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் தேவை.

7000 ரன்கள் சாதனை
கேகேஆர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் இதுவரை 700 ரன்களை எடுத்துள்ளார். கேகேஆருக்கு எதிரான கடந்த 2020 சீசன் போட்டியில் அவர் 29 பந்துகளில் 51 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கேகேஆர் கேப்டன் இயான் மார்கன் டி20 வடிவத்தில் 7000 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 43 ரன்களே மீதமுள்ளது.

முதலிடத்திற்கு ஒரு அரைசதம்
இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணிக்காக இதுவரை 20 அரைசதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பெற அவருக்கு இன்னும் ஒரு அரைசதம் தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் அவர் இதை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

கெயிலுக்கு 109 ரன்கள் தேவை
இதனிடையே ஐபிஎல்லில் 5,000 ரன்களை பூர்ததி செய்ய கிறிஸ் கெயிலுக்கு இன்னும் 109 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை 136 இன்னிங்ஸ்களில் விளையாடி 4891 ரன்களை எடுத்துள்ள கெயில், கேகேஆர் அணிக்கு எதிராக ஐபிஎல்லில் அதிகமான சிக்ஸ்களை (54) அடித்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.


Click it and Unblock the Notifications











