"உள்ளே வரக் கூடாது".. யுஏஇ வைத்த புது "ஆப்பு".. இருப்பு கொள்ளாமல் தவிக்கும் ஐபிஎல் அணி ஓனர்கள்
மும்பை: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள், அமீரகத்தில் நடக்கவுள்ள சூழலில், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவியது.
இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல்லை பிசிசிஐ ஒத்திவைத்தது. மீண்டும் தொடரை இந்தியாவில் நடத்த வாய்ப்பே இல்லாத சூழலில், பிசிசிஐ சார்பில் நடந்த "SGM" மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

பிசிசிஐ
செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளும் நடத்தப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, அக்டோபர் 15ம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை உறுதி செய்யவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம்
இந்நிலையில் போட்டி தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள, சில ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் ஜுலை மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்வதாக இருந்தனர். ஆனால், புதிய சிக்கலாக, இந்தியாவில் இருந்து அமீரகம் வருவதற்கான தடையை ஜுலை 21ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது அந்நாட்டு அரசு. இதனால், ஐபிஎல் அணி நிர்வாகிகள் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பல்க் டிக்கெட்
விரைவாக அமீரகம் சென்றால் தான், விமான புக்கிங், ஹோட்டல் புக்கிங் என்று அனைத்து வித பணிகளையும் முன்பாகவே செய்து முடிக்க முடியும். கால தாமதமானால், வீரர்களை ஒருங்கிணைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, அமீரகம் செல்வதற்கு மொத்தமாக டிக்கெட் புக் பண்ணுவதிலும் பெரும் சிக்கல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, Dubai Expo 2021 வரும் அக்டோபர் மாதம் தொடங்கி, 2022 மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால், 'பல்க் டிக்கெட்' ஆப்ஷனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர் அணி நிர்வாகிகள்.

ஒரே ஆறுதல்
இந்த எக்ஸ்போவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலதரப்பட்ட மக்களும் வருவார்கள் என்பதால், பயோ-பபுளுக்கும் ஆபத்து இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், அமீரகம் செல்ல சார்ட்டர் விமானங்களை தொடர்ந்து இயக்குவது குறித்து அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இப்போதைக்கு ஐபிஎல் அணிகளின் ஓரே ஆறுதல், நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆட அந்நாட்டு வாரியம் அனுமதித்து இருப்பது தான்.


Click it and Unblock the Notifications
