
தொடரும் சிக்கல்
ஐபிஎல் தொடரை போலவே ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. அதன்படி ஐபிஎல் ( அக்.15) முடிந்த அடுத்த இரண்டே நாட்களில் ( அக்டோபர் 17) டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. எனவே அயல்நாட்டு வீரர்கள் அதற்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக மாற்று வீரர்களுக்காக அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆர்சிபி அதிரடி மாற்றம்
அதில் பெரும் சிக்கல் ஆர்சிபி அணிக்கு தான் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதில் இருந்து மீண்டுள்ளது. அந்த அணியில் இருந்து ஆடம் சாம்பாவுக்கு பதிலாக இலங்கை அணி வீரர் வானிண்டு ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு மாற்றாக இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல்-ல் சிங்கப்பூர் வீரர்
இது ஒரு புறம் இருக்க புதிதாக சிங்கப்பூர் அணியை சேர்ந்த டிம் டேவிட் எனும் இளம் வீரரையும் ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சிங்கப்பூர் தேசிய அணியில் சேர்ந்த ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். எனவே இவர் யார், அப்படி என்ன செய்திருக்கிறார், இவரின் சமீபத்தில் ஃபார்ம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

டிம் டேவிட் யார்
டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அந்த நாட்டு அணிக்காக இதுவரை 14 சர்வதேச டி20 போட்டிகளில் டிம் டேவிட் விளையாடி 558 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 46.50 ரன்கள் ஆகும். மேலும் அவரின் ஸ்டரைக் ரேட் 158.52 ஆகும். சிங்கப்பூர் அணிக்காக நேபால், ஹாங்காங், உள்ளிட்ட அணிகளை எதிர்த்து விளையாடியுள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருப்பு
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அங்கு உள்நாட்டு தொடரான பிக் பேஸில் அதிரடி காட்டி கவனம் பெற்றார். 2020 - 2021ம் ஆண்டுக்கான பிபிஎல் தொடரில் அவரின் அதிரடி தொடக்க அனைவருக்கு பிடித்திருந்தது. இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது எனக்கூறப்படுகிறது. டிம் டேவிட்டும் வாய்ப்புக்காகவும் காத்துக்கொண்டுள்ளார்.

புள்ளிப்பட்டியல்
இந்த சூழலில் தான் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி அவரை ஐபிஎல் தொடருக்கு அழைத்து வந்துள்ளது. டிம் டேவிட்டின் ஆட்டம் குறித்து இந்திய வீரர்கள் பலருக்கும் தெரியாததால், தொடக்கம் முதலே அவரின் அதிரடியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆர்சிபி அணி தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











