
ஏற்பாடுகள்
ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கனவே அமீரகம் சென்று அங்கு குவாரண்டைனை முடித்து விட்டனர். தற்போது இரு அணி வீரர்களும் முதற்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விரைவில் புறப்பட தயாராகி வருகின்றது. இந்நிலையில் இந்த ஐபிஎல்-ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆர்சிபி அணி அமீரகம் புறப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாற்றங்கள் என்னென்ன?
ஆர்சிபி அணியில் நியூசிலாந்து வீரர்கள் ஃபின் ஆலன், ஸ்காட் குக்கெலிஜின் ஆகியோர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் , ஆடம் சாம்பா என 5 அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அவர்களுக்கு பதிலாக இலங்கை வீரர்கள் ஹசரங்கா மற்றும் சமீரா ஆகியோர், சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சிமான் கட்டிச் விலகியிருப்பதால் புதிய பயிற்சியாளராக மைக் ஹெஸ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த நடவடிக்கை
இந்நிலையில் மிகப்பெரும் மாற்றத்துடன் அந்த அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களை வரும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று பெங்களூருவில் ஒன்றிணைய அறிவுறுத்தியுள்ளது. அங்கு அனைவரும் 7 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு 3 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் நெகட்டீவ் என வந்த பிறகு தனி விமானம் மூலம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று அமீரகம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

முதல் போட்டி விவரம்
இதே வேளையில் ஆர்சிபியின் அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அமீரகத்தில் வரவுள்ளனர். அங்கு அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதில் 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் நெகட்டீவ் என வந்த பிறகு பயிற்சியை தொடங்கவுள்ளனர். ஆர்சிபி அணி தனது முதல் போட்டியாக வரும் செப்டம்பர் 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது.

வலுவான அணி
இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் உள்ளன. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றம் ஆர்சிபிக்கு எப்படி பட்ட பலனை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திட்டம்
இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளோம். நீண்ட நாட்களாக ஒன்றாக பயணம் செய்து, நிதானமாக இந்த இடத்திற்கு வந்துள்ளோம். வானிண்டு ஹசரங்கா, டிம் டேவிட், சமீரா ஆகியோர் இக்கட்டான காலக்கட்டத்தில் அணிக்குள் கொண்டு வந்துள்ளோம். எனினும் நாங்கள் முதல் பாதி தொடரில் செயல்பட்டதை போலவே சிறப்பாக செயல்படுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











