எதிர்ப்பு தெரிவித்த டீம்.. ஐபிஎல்லில் கடைசி நேரத்தில் சேர்க்கப்படாத 2 புதிய அணிகள்.. பரபர காரணம்!
டெல்லி: 2021 ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை இணைக்க முடியாது என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு பின் இருக்கும் காரணங்கள் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
2021 ஐபிஎல் தொடரை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அடுத்த தொடருக்கான வேலையில் பிசிசிஐ இறங்கி உள்ளது.
அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதங்களில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கு பின் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

எப்படி
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை இணைக்க போவதாக தகவல்கள் வந்தது. இரண்டு புதிய அணிகளை உள்ளே கொண்டு வந்து மொத்தமாக 10 அணிகள் வைத்து விளையாட பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வந்தது.

மாற்றம்
இந்த நிலையில் அடுத்த சீசனில் முடியாது என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதாவது இருக்கிற 8 அணிகள் போதும், 2 அணிகளை இந்த வருடம் இணைக்க வேண்டாம். அடுத்த வருடம் புதிய அணிகளை இணைத்தால் போதும் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

முடிவு காரணம்
பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு பின் இருக்கும் காரணங்கள் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபிஎல்லில் இருக்கும் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இந்த புதிய அணி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.புதிய இரண்டு அணிகள் வந்தால் மொத்தமாக பெரிய ஏலம் நடக்கும்.

அணிகள் மாறும்
பெரிய ஏலம் நடந்தால் இருக்கிற அணிகள் எல்லாம் மொத்தமாக மாறி, புதிய புதிய வீரர்கள் அணிக்குள் வருவார்கள். இதனால் மிகவும் வலிமையாக இருக்கும் மும்பை, டெல்லி போன்ற அணிகள் மோசமாக பாதிக்கும். இதனை காரணமாகவே புதிய அணிகளை இப்போது சேர்க்க கூடாது, அது எங்களின் திட்டங்களை குலைக்கும் என்று மும்பை போன்ற அணிகள் கூறியுள்ளது.

கடந்த ஏலம்
கடந்த ஏலம் முடிந்த 3 வருடமே ஆகிறது. அதற்குள் பெரிய ஏலம் நடத்துவது தவறான விஷயம். இதனால் இன்னும் ஒரு வருடம் இதேபோல் அணிகள் விளையாடட்டும் என்று மும்பை, டெல்லி அணிகள் கோரிக்கை வைத்துள்ளது. இதை தொடர்ந்தே 2021 ஐபிஎல்லில் புதிய அணிகளை சேர்க்கும் பொறுப்பை பிசிசிஐ கைவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications