4 அணிகள் மீது இறங்கிய இடி.. ஐபிஎல் தொடரில் விளையாட முக்கிய வீரர்களுக்கு சிக்கல்.. முழு விவரம்!
மும்பை: 4 அணிகளின் முக்கிய தூண்களாக பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இன்னும் 9 நாட்களே உள்ளதால் அணிகள் பயிற்சிகளை தொடங்கிவிட்டன.
அனைத்து அணிகளும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டல்களில் தற்போது முகாமிட்டுள்ளன. இந்நிலையில் 4 அணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி அணி
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்தாண்டு மிகப்பெரிய பலமாக தக்கவைத்துள்ள வீரர் தான் ஆன்ரிச் நார்ட்ஜே. வேகப்பந்துவீச்சாளரான அவர், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையால் குறைந்தது 4 மாதங்கள் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் இன்னும் அவருக்கு வலிகள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

சென்னை அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகப்பெரிய தொகையாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தவர் தான் தீபக் சஹார். இந்திய களங்களில் டெத் ஓவர்களில் விக்கெட் மழை பொழியும் அவருக்கு தசை நார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பது குறித்து பிசிசிஐ இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் சஹாரின் நிலை தெரியாமல் சிஎஸ்கே நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

ஐதராபாத் அணி
மெகா ஏலத்தின் போது ஐதராபாத் அணியின் தேர்வுகள் மீது விமர்சனங்கள் இருந்தன. எனினும் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது கேப்டன் கேன் வில்லியம்சன் தான். ஆனால் அவரும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எந்த போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். தோள்பட்டையில் சிறிய காயம் தான் ஏற்பட்டதாக ரசிகர்கள் எண்ணினர். கடைசியில் அது பெரிய காயம் என்றும் நீண்ட கால ஓய்வு தேவை எனத்தெரியவந்துள்ளது.

மும்பை அணி
கடந்த சீசன்களில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்தது சூர்யகுமார் யாதவ் தான். ஆனால் இந்த முறை அவர் எப்படி விளையாடப்போகிறார் என சந்தேகம் நிலவுகிறது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் எனக்கூறப்பட்டுள்ளது. எனினும் காயத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என்ற அச்சம் உள்ளதால், பாதி தொடரையே கூட மிஸ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications