கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா??.. கே.எல்.ராகுல் செய்த கேப்டன்சி.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் செய்த தவறை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த மோதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை சேர்த்தது.

சாதாரண இலக்கு
ஓப்பனிங் வீரர்கள் பட்லர் 13, தேவ்தத் பட்டிக்கல் 29, சஞ்சு சாம்சன் 13, வான் டர் டுசன் 4 ரன்களுக்கு என அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த சிம்ரான் ஹெட்மெயர் 36 பந்துகளில் 59 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 23 பந்துகளில் 28 ரன்களை குவித்தனர். இதனால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தக்கூடிய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

விநோத திட்டம்
இதன் பின்னர் வந்த லக்னோ அணியில் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்புகள் பறக்க கே.எல்.ராகுல் அவுட்டானார். இதன் பின்னர் பேட்டிங் வரிசையில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுக்கப்பட்டது. லோயர் ஆர்டர் வீரர்களான ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் 3வது மற்றும் 4வது பேட்ஸ்மேன்களாக களமிறக்கப்பட்டனர். பேட்டிங் ஆர்டரை மாற்றினால் எதிரணியை குழப்பி விடலாம் என நினைத்தார் எனத்தெரிகிறது.

ப்ளான் சொதப்பல்
ஆனால் அந்த திட்டம் பெரும் சொதப்பலில் முடிந்தது. கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டும், ஜேசன் ஹோல்டர் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். சிறப்பான ஃபார்மில் இருந்த தீபக் ஹூடா (25), ஆயுஸ் பதோனி (5) ஆகியோர் பேட்டிங் வரிசை மாறிய பதற்றத்தில் சொதப்பினர். இதன் பின்னர் கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் 17 பந்துகளில் 38 ரன்களை குவிக்க லக்னோ அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

ராகுல் விளக்கம்
லக்னோவிடம் உள்ள பேட்டிங் பலத்திற்கு, சரியான ஆர்டரை இறக்கியிருந்தால் கூட சுலபமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் விநோதமாக செய்கிறேன் என்ற பெயரில் கே.எல்.ராகுல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், எங்கள் அணியில் ஆல்ரவுண்டர்கள் அதிகளவில் உள்ளனர். எனவே அவர்களின் வரிசையை சற்று மாற்றினால் எதிரணியால் எங்களை கணிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் அந்த திட்டம் கைக்கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications