“நீங்கெல்லாம் கேப்டன்சிக்கு தகுதி இல்ல” கே.எல்.ராகுல் மீது சீறும் ரசிகர்கள்.. 2 ஓவரில் மாறிய ஆட்டம்
மும்பை: குஜராத் அணியுடனான தோல்விக்கு பிறகு கே.எல்.ராகுலின் கேப்டன்சி மீது மோசமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வெற்றி பெற வேண்டிய போட்டி
கடைசி வரை லக்னோ அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த போது, கேப்டன் கே.எல்.ராகுல் எடுத்த தவறான முடிவுகள் அந்த அணியின் வெற்றி கனவில் மண்ணை வாரி போட்டுவிட்டது. குஜராத் அணியில் ஓப்பனிங் வீரர் கில் டக் அவுட்டாக மற்றொரு ஓப்பனர் மேத்யூவ் வேட் 30 ரன்களுக்கு அவுட்டானார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் 4 ரன்களுக்கும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுக்கும் வெளியேற அந்த அணி 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஹூடா மீது நம்பிக்கை
இலக்கு குறைவாக இருந்ததால் பார்ட் டைம் பவுலரான தீபக் ஹூடாவுக்கு 2 ஓவர்களை கொடுத்தார் கே.எல்.ராகுல். இதனை சரியாக பயன்படுத்தி 9 ரன்களை மட்டுமே தந்து ஒரு முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணிக்கு 67 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் நிலவி வந்தது. இந்த சமயத்தில் லக்னோ அணியின் முன்னணி பவுலர்களாக துஷ்மந்தா சமீராவுக்கு 2 ஓவர்கள், ஆவேஷ் கானுக்கு 2 ஓவர்கள், மோஷிஷ் கானுக்கு 2 ஓவர்கள் பாக்கி இருந்தது.

ராகுல் செய்த பெரும் தவறு
ஆனால் கடைசி கட்டத்தில் 16வது ஓவரை மீண்டும் ஹூடாவுக்கு கொடுத்தார் ராகுல். பார்ட் டைம் பவுலரின் யுக்தியை தெரிந்துக்கொண்ட எதிரணி பேட்ஸ்மேன்கள் அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை விளாசித் தள்ளினர். சரி அடுத்த ஓவரிலாவது சமீராவை வைத்து சரி செய்வார் என்று பார்த்தால், 17 ஓவரை ஸ்பின்னரான ரவி பிஷ்னாயிடம் தந்தார். அதாவது பனிப்பொழிவில் மிக ஈரமான களத்தில் ஸ்பின்னரிடம் கொடுத்தார். அந்த ஓவரில் 17 ரன்கள் பறந்தன.

கடைசி 3 ஓவரிலும் சொதப்பல்
இப்படி தவறான முடிவுகளை எடுத்த கே.எல்.ராகுல், ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்த சமீராவுக்கு ஒரே ஒரு ஓவரை தான் கொடுத்தார். அதாவது 18 மற்றும் 20வது ஓவரை இளம் பவுலர் ஆவேஷ் கானுக்கும், 19வது ஓவரை சமீராவுக்கும் தந்தார். இதனால் குஜராத் அணி அசால்டாக 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுலின் இந்த மோசமான கேப்டன்சிக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications