கவுதம் கம்பீரின் மறுபக்கம்.. லக்னோ வீரர்களிடம் ஆவேச பேச்சு.. ட்ரஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன- வீடியோ
மும்பை: லக்னோ அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்ததை அடுத்து, அணியின் ஆலோசகர் கம்பீர் கடும் ஆத்திரமடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் நேற்று குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் ஆளாக ப்ளே ஆஃப் செல்லும் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

லக்னோ மோசமான தோல்வி
ஆனால் லக்னோ அணியின் சொதப்பலால் சுவாரஸ்யமே இன்றி முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 144 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. எனவே சுலபமாக விரட்டி விடுவார்கள் என நினைத்த போது, லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முக்கியமான போட்டியில் இப்படியா ஆடுவது என ரசிகர்கள் விமர்சித்தனர்.

விட்டுக்கொடுத்தோமா?
இந்நிலையில் நேற்று இரவில் வீரர்களுக்கு சரமாரி பாடம் எடுத்துள்ளார் கவுதம் கம்பீர். அதில், போட்டி என்று இருந்தால் ஒருவர் தோற்றாக வேண்டும். ஆனால் நாம் தோற்கவில்லை. விட்டுக்கொடுத்தது போன்று தான் எனக்கு தோன்றியது. அவ்வளவு பலவீனமான ஆட்டத்தை உங்களிடம் இருந்து நான் பார்த்தேன். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் பலவீனமாக இருக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கவனமே இல்லையா
நாம் பல அணிகளை வீழ்த்தினோம். ஆனால் இன்று ஆட்டத்தின் போக்கை கூட புரிந்துக்கொள்ளாமல், ஒவ்வொருவரும் அவர் அவர் இஷ்டத்திற்கு நடந்துக்கொண்டீர்கள். அவர்கள் பவுலிங் சிறப்பாக செய்வார்கள் என நமக்கு தெரியும். அப்படி இருந்தும் அதனை இவ்வளவு மோசமாக எதிர்கொள்வதா? இரவும் பகலுமா பயிற்சி எடுப்பது இதற்காக தானா? என வீரர்களிடம் கம்பீர் கோபமடைந்தார்.
அடுத்த வாய்ப்பு
லக்னோ அணிக்கு அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா அணி என இரண்டு மோதல்கள் உள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் தான் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தையாவது உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் வேறுகள் அணிகள் கூடுதல் வெற்றிகளுடன் உள்ளே நுழைந்துவிடலாம்.


Click it and Unblock the Notifications