கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கரின் அதிரடியான அரைசதம் காரணமாக குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக குர்பாஸ் 81 ரன்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் இம்பேக்ட் பிளேயராக வந்தார். அவரும் சாஹாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே சுப்மன் கில் அதிரடி காட்ட, சாஹா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் ஹர்திக் பாண்டியா - சுப்மன் கில் கூட்டணி கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 2வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்திக் பாண்இயா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி மீண்டும் ஆட்டத்திற்கு வந்தது. இதன்பின்னர் மில்லர் - விஜய் சங்கர் இணை சிறிது நேரம் நிதானமாக ஆடியது. 14 ஓவர்கள் முடிவில் 111 ரன்கள் மட்டுமே குஜராத் அணி எடுத்திருந்த நிலையில், டேவிட் மில்லர் கியரை அதிரடிக்கு திருப்பினார். சுயஷ் சர்மா வீசிய 15வது ஓவரில் குஜராத் அணி 18 ரன்களை விளாசியது.

தொடர்ந்து விஜய் சங்கரும் தன் பங்கிற்கு சிக்சர்களை விளாச, குஜராத் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக வருண் சக்கரவர்த்தி வீசிய 17வது ஓவரில் மூன்று சிக்சர்களை விஜய் சங்கர் விளாசி மிரட்டினார். இதையடுத்து கடைசி 3 ஓவரில் குஜராத் அணி வெற்றிபெற 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் விஜய் சங்கர் அதிரடியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 24 பந்துகளில் அரைசதம் அடித்து குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் குஜராத் அணி ஐபிஎல் தொடரில் 6வது வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.