கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ள மீம்ஸ் பார்க்கலாம்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். அதேபோல் கடந்த 15 சீசன்களாக 120.68 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்த ரஹனேவின் ஸ்ட்ரைக் ரேட், நடப்பு சீசனில் 199.05ஆக மாறியுள்ளது. கடந்த 15 சீசன்களாக ரஹானே விக்ரம் படத்தில் குழந்தையை வளர்க்க உதவும் வள்ளியம்மாளாகவும், நடப்பு சீசனில் ஏஜெண்ட் டீனாவாக மாறிவிட்டதாகவும் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

அதேபோல் ரஹானே நேற்றைய ஆட்டத்தில் 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து நீக்கிய தேர்வுக் குழுவுக்கு ரஹானே பதிலளிக்கும் வகையில் ஆடி வருகிறார். இதனை சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா பேசும், "போய் சொல்லுனா.. நா யாருனு நிரூபிக்கிற நேரம் இது" என்று ரஹானே பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்டகாசம்.

சென்னை அணியின் பேட்டிங்கின் போது கொல்கத்தா அணி வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். மீண்டும் பேட்டிங் செய்ய வந்த ஜேசன் ராய், காலில் காயத்துடன் 26 பந்துகளில் 61 ரன்களை விளாசி தள்ளினார். யாரடி நீ மோகினி படத்தில் நேர்காணல் முடித்து வெளிவரும் தனுஷிடம் தந்தை ரகுவரன், "வேலை கிடைக்கலனா பரவால்ல.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்" என்று சொல்லுவார். அந்த புகைப்படத்தை தனுஷாக ஜேசன் ராயாகவும், ரகுவரனாக கேகேஆர் அணியாக உருவாக்கி, "காயத்தோடு இந்த அளவுக்கு சண்ட செஞ்சதே பெரிய விஷயம்" என்று உருவாக்கப்பட்ட மீம் சென்டிமென்டல் டச்.

அதேபோல் அண்ணாத்த படத்தில் ரஜினியும் வில்லனும் பேசும் காட்சியை, ஷிவம் துபேவும் அதிரடி வீரர் ரஸ்ஸலும் பேசுவது போல் ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ரஸ்ஸல், உன்ன அடிக்கிறது என் கடமை டா என்று சொல்வதற்கு, சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே, "கொல்கத்தாவுக்கே காப்பு கட்டிட்டேன்.. எங்க ஊரு மதுரை வீரன் சாமிக்கு உன்ன நேந்து விட்டுட்டேன்" என்று பேசும் மீம் தெறி ரகம்.

கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நீண்ட காலத்திற்கு பின் சிஎஸ்கே முதலிடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனை, சென்னை ரசிகர்கள் வடிவேலு சட்டையை கழற்றிவிட்டு ரவுடிகளிடம் எறிஞ்சுபாரு என்று சொல்லும் காட்சியை ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.