பெங்களூரு: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிவடைந்துவிட்டது. . டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹானே - கான்வே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 53 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதேபோல் ஓவரில் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் 111 மீட்டர், 100 மீட்டர் என்ற உயரத்தில் சிக்சர்களை பறக்கவிட்டார்.

கான்வே 45 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷிவம் துபே 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் மோயின் அலி 9 பந்துகளில் 19 ரன்களும், ஜடேஜா 8 பந்துகளில் 10 ரன்களும் அடிக்க, 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களிலும், லோம்ரர் டக் அவுட்டாகியும் வெளியேற, 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்தது.
இதனையடுத்து, டுபிளஸிஸ் உடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், சிஎஸ்கே பந்துவீச்சை மைதானத்தின் 4 பக்கமும் சிதறடித்தனர். குறிப்பாக மேக்ஸ்வெல் சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார். சிஎஸ்கே அணி 2 கேட்ச்களை தவறவிட்டு, இந்த ஜோடிக்கு லைப் வேறு கொடுத்தது. இந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 8 சிக்சர்களை அடிக்க, 36 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார்.
எனினும் தீக்சனா ஓவரை தூக்கி அடித்த மேக்ஸ்வெல் தோனியிடம் கேட்ச் ஆனார். மறுபுறம் சிஎஸ்கே பந்துவீச்சை போட்டு பொளந்த டுபிளஸிஸ் 33 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில், அவரும் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 126 ரன்களை சேர்த்தது. கடைசி 5 ஓவரில் 58 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது திடீரென்று தினேஷ் கார்த்திக் பவுண்டரிகளை விளாச, அவருடைய கேட்சையும் சிஎஸ்கே வீரர்கள் விட்டனர்.

கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரிகளை 17 வது ஓவரில் அடித்து 28 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு இம்பேக்ட் வீரராக பிரபுதேசாய் முக்கிய கட்டத்தில் களமிறங்கினார். கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாபாஸ் அகமது 12 ரன்களில் பதிரத்னா பந்தில் வெளியேறினார். 18வது ஓவரில் பதிரத்னா 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். எனினும் கடைசி பந்தில் சிஎஸ்கே வீரர்கள் ஒரு ரன் அவுட்டை மிஸ் செய்தனர்.
கடைசி 12 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. இதில் பிரபுதேசாய் சிக்சர் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு மேலும் கூடியது. இதனையடுத்து கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனை பதிரத்னா வீசினார். அப்போது பிரபுதேசாய் பந்தில் சிக்சர் அடிக்க 2 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. எனினும் கடைசி 2 பந்தில் பதிரத்னா யாக்கர்களை வீச, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.