சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் மற்றும் ஒரு ரன் அவுட் செய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சிஎஸ்கே கேப்டன் தோனி படைத்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 77 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 41 வயதிலும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் மற்றும் கடைசி பந்தில் ஒரு ரன் அவுட்டை தோனி செய்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
இதன் மூலம் இளம் விக்கெட் கீப்பர்களுக்கு முன்மாதிரியாகவும் தோனி விளங்கி வருகிறார். மின்னல் வேக ஸ்டம்பிங், ஸ்டம்புகளுக்கு குறி தவறாமல் வீசப்படும் பந்துகள், கேட்ச்கள் என்று ஒரே நாளில் தோனி மூன்று வகையிலும் விக்கெட்டை வீழ்த்தியது சேப்பாக்கம் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ள தோனி, அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருவது சென்னை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.