சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் இருக்கும் சிஎஸ்கே அணியும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் பல பரிட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி முதல் ஐந்து ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதன் பிறகு கடைசியாக விளையாடிய ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் எட்டு புள்ளிகளுடன் டெல்லி இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் லக்னோக்கும், கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கும் மூன்றே புள்ளிகள் தான் வித்தியாசம். இதனால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வென்றால் புள்ளி பட்டியல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஆனால் சிஎஸ்கே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. எட்டு முறை டெல்லிய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை எதிர் கொண்டிருக்கிறது.
இதில் வெறும் இரண்டு முறை தான் அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் கடைசியாக 2010 ஆம் ஆண்டு தான் அந்த வெற்றி நிகழ்ந்திருக்கிறது. இதுவரை 27 முறை இரு அணிகளும் மோதி இருக்கிறார்கள். அதில் 17 முறை சிஎஸ்கே அணியும் 10 முறை டெல்லி அணியும் வென்று இருக்கிறது. நடப்பு தொடரில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் சேப்பாக்கத்தில் விளையாடி மூன்றில் வெற்றி இரண்டு தோல்வி அடைந்திருக்கிறது.
இரண்டு அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பலமான அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இருக்கிறார்கள். சென்னை அணி தனது சொந்த மண்ணில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோன்று டெல்லி அணி 188 என்ற டார்கெட்டை பதினாறு புள்ளி நான்கு ஓவரில் எட்டி ஆர்சிபிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
டெல்லி அணியின் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர்பட்டேல் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசுவார்கள்.அதேசமயம் டெல்லியில் உள்ள பேட்ஸ்மேன்கள் வார்னர், பில் சால்ட் ஆகியோர் சிஎஸ்கே வின் சிலர் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேள்வியும் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பென்ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதியை பெற்றாலும் அவர் எந்த வீரருக்கு பதிலாக களம் இறங்குவார் என்று குழப்பமும் இருக்கிறது.
சிஎஸ்கே அணி அதே பிளேயிங் லெவனின் வைத்து தான் களமிறங்கும். ஆனால் டெல்லி அணியின் முக்கிய வீரரான நோக்கியா குடும்ப விவகாரம் காரணமாக தென்னாப்பிரிக்கா திரும்பி இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகும்.