CSK vs SRH: "பார்த்தாலே பச்ச முகம்" தமிழக வீரர் நடராஜனின் மகளுடன் விளையாடும் தோனியின் க்யூட் வீடியோ!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தமிழக வீரர் நடராஜனின் மகளுடன் விளையாடும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 77 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்தப் போட்டிக்கு பின் ஐதராபாத் அணியின் இளம் வீரர்களோடு சிறிது நேரம் சிஎஸ்கே கேப்டன் தோனி உரையாடினார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்களான ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் டேல் ஸ்டையின் ஆகியோரை தோனி சந்தித்தார். பின்னர் ஐதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தனது ஜெர்சியில் தோனியின் கையெழுத்தை பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வீரர் நடராஜனின் குடும்பத்தினரை தோனி சந்தித்தார். நேற்றையப் போட்டியில் நடராஜன் களமிறங்காத நிலையில், போட்டிக்கு பின் நடராஜன் தோனியை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நடராஜனின் மகளுடன் தோனி சிறிது நேரம் விளையாடினார். அந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன்பின்னர் நடராஜன், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் இணைந்து தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பதாக தோனி கூறியுள்ள நிலையில், ஜாம்பவான் வீரர்கள் முதல் இளம் வீரர்கள் வரை அனைவரும் தோனியை சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பலரும் தோனியை சந்தித்து ஆட்டோகிராஃப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications