சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக இறுதி சுற்றுக்கு சென்றது. இந்த போட்டி முடிவடைந்து 24 மணி நேரம் ஆகும் நிலையில் தோனியின் கேப்டன்சி மாஸ் சம்பவத்தை ரசிகர்கள் இன்னும் பேசி வருகிறார்கள்.
மற்ற அணிகளை காட்டிலும் சிஎஸ்கே அணியில் அனுபவ மிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் கிடையாது. வெளிநாட்டு ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை. இப்படி இருக்க எப்படி தோனி இறுதிப் போட்டி வரை அணியை கொண்டு வந்தார் என பலரும் கேட்டனர்.

இதற்கு தோனி அளித்துள்ள பதிலை தற்போது பார்க்கலாம். இன்னொரு இறுதிப் போட்டிக்கு நாங்கள் வந்து விட்டோம் என்று சொல்லும் அளவுக்கு ஐபிஎல் சாதாரண தொடர் கிடையாது. ஏனென்றால் தற்போது 8 அணிகள் இல்லை. 10 அணிகள் இருப்பதால் இறுதிப் போட்டிக்கு செல்வது மிகவும் கடுமையாக மாறிவிட்டது. இரண்டு மாதங்கள் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
எங்கள் வீரர்களும் தங்களுடைய உத்வேகத்தையும் திறனையும் வெளி காட்டியிருக்கிறார்கள். அணியில் இருக்கும் அனைவரும் இந்த தொடரில் தங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். எங்கள் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்கள் தங்களுக்கு கிடைத்த பேட்டிங்கில் ரன்கள் சேர்த்திருக்கிறார்கள்.
எங்கள் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுவதற்கு காரணம் அவர்களுக்கு உரிய சூழலை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். அவர்களுடைய பலம் என்ன என்பது குறித்து அவர்களுக்கு உணர்த்துவோம். எந்த இடத்தில் அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் எப்படி எல்லாம் பந்து வீசி தங்களது திறமையை முன்னேற்றிக் கொள்ளலாம் என்பது குறித்து நாங்கள் பயிற்சி வழங்குகிறோம்.

பிராவோ, எரிக் சிம்மின்ஸ் போன்ற சிறந்த பயிற்சியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். ஆனால் களத்தில் அவர்கள் தனியாக தான் செயல்பட வேண்டும். பந்துவீச்சாளர்கள் வெறுக்கத்தக்க கேப்டனாக தான் நான் களத்தில் செயல்படுகிறேன். காரணம் போட்டியின் சூழல் ஆடுகளத்தின் நிலைமை இதை கருத்தில் கொண்டு நான் பில்டர்களை மாற்றிக் கொண்டே இருப்பேன். இதனால் சிலருக்கு நான் பிடிக்காமல் போகலாம்.
ஆனால் என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை நம்பி தான் நான் பில்டர்களை மாற்றிக் கொண்டே இருப்பேன். எப்போதுமே பில்டர்களை என்னை பாருங்கள் என்று நான் சொல்வதுண்டு. ஏனென்றால் நான் அவ்வப்போது சில அறிவுரைகளை கூறி வருவேன். ஏலத்தில் நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்று நான் வெளியே சொல்லிவிட்டால் பிறகு என்னை யாரும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள். அது தொழில் ரகசியம் என்றும் தோனி கூறினார்.