அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்றிருக்க வேண்டியது. இன்றைய தினம் எல்லாம் நாம் சிஎஸ்கே கோப்பையை வென்று விட்டது இல்லை தோற்றுவிட்டது என்ற மகிழ்ச்சி அல்லது சோகத்தில் இருந்திருப்போம்.
ஆனால் இது எதுவுமே நடக்காமல் செய்துவிட்டது மழை. இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஆனால் இன்றைய தினமும் அகமதாபாத்தில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில் மழைமேகங்கள் குஜராத்துக்கு படை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போல் போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று சென்னை வெதர்மேன் என்ற மற்றொரு நபர் கணித்துள்ளது படி போட்டி தொடங்கி நடைபெறும்போது 8.30 அல்லது ஒன்பது மணி அளவில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆட்டம் தடைப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சு செய்வது சிறப்பான முடிவாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மழை நேற்று போல் இன்றும் குறிக்கிட்டால் என்ன செய்வது என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.இதில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே ஒரு ஓவராவது நடத்தி போட்டியின் முடிவை அறிவித்து விடலாம் என்று முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
அதாவது குறைந்தபட்சம் ஐந்து ஓவர்கள் நடத்த முயற்சி செய்யப்படும். அதுவும் முடியவில்லை என்றால் 12:30 மணிக்கு மேல் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை நடைமுறைப்படுத்தப்படும். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள். அதுவும் முடியவில்லை என்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும்.