கடைசி 5 ஓவர்களில் வெறும் 45 ரன்கள்.. ஃபினிஷிங்கில் சொதப்பிய கேகேஆர்.. மும்பைக்கு 186 ரன்கள் இலக்கு!
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் வயிறு வலி காரணமாக ரோகித் சர்மா விலக, கேப்டன்சி பொறுப்பை சூர்யகுமார் யாதவ் ஏற்றார். பின்னர் டாஸ் வென்ற மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.

இதன் பின்னர் கொல்கத்தா அணி சார்பாக குர்பாஸ் - ஜெகதீசன் கூட்டணி களமிறங்கியது. ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இதனால் கேகேஆர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே குர்பாஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பவர் பிளே ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 57 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ராணா - வெங்கடேஷ் கூட்டணி சேர்ந்தது.
ஆனால் ஷோக்கின் பந்துவீச்சில் ராணா 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஷர்துல் தாகூர் களமிறக்கப்பட்டார். அவர் வெங்கடேஷ் ஐயருக்கு கம்பெனி கொடுக்க, மும்பை அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கினார். 23 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், பின்னர் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். மறுமுனையில் நின்றிருந்த தாகூரும் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் களமிறங்கினார். ரிங்கு சிங் களமிறங்குவதற்கு முன் கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மட்டுமே பவுண்டரிகளை விளாசினார்.
தொடர்ந்து 15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பாக ஆடிய வெங்கடேஷ் ஐயர், 49 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் மெக்கல்லத்திற்கு பின் சதம் விளாசிய இரண்டாவது கொல்கத்தா வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 104 ரன்களில் மெரிடித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரிங்கு சிங்கும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கொல்கத்தா இன்னிங்ஸை சிறப்பாக முடிக்கும் பொறுப்பு ரஸ்ஸல் கைகளில் கொடுக்கப்பட்டது. 19 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் கேகேஆர் அணி வெறும் 45 ரன்களை மட்டுமே எடுத்ததால், 200 ரன்களை எடுக்கமுடியாமல் திணறியுள்ளது. மும்பை அணி தரப்பில் ஹிருத்திக் ஷோக்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications