லக்னோ: பணமின்றி தவித்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தன்னை போல் கஷ்டப்படாமல் இருக்க கொல்கத்தா அணியின் இளம் அதிரடி வீரர் ரிங்கு சிங் ரூ.50 லட்சம் செலவில் விடுதி ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தொடர்ச்சியாக 5 சிக்சர்களை விளாசி உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் ரிங்கு சிங். சர்வதேச கிரிக்கெட் இதுபோன்ற தருணங்களை பார்ப்பதே அரிதாக இருக்கும் சூழலில், ரிங்கு சிங்கின் சாதனை ஐபிஎல் தொடருக்கு சிறந்த விளம்பரமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஃபினிஷிங் ரோலில் கேகேஆர் அணிக்காக களமிறங்கு அவர், எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் அசரடிக்கிறார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் பகுதியைச் சேர்ந்த ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை செய்யும் தந்தை, ஆட்டோ ஓட்டும் அண்ணன், பயிற்சி கூடத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடும் மற்றொரு அண்ணன் என்று அன்றாட வாழ்க்கைக்கு பல்வேறு தொழில்களை செய்து வந்த குடும்பத்தில் பிறந்தவர். இதனால் ரிங்கு சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக அதிக கஷ்டங்களை அனுபவித்தவர்.
ஆனால் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று ரிங்கு சிங் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பயிற்சிக்கு, 2018ஆம் ஆண்டு பலன் கிடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ.80 லட்சத்திற்கு ரிங்கு சிங்கை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதன் பின்னர் ரிங்கு சிங் குடும்பத்தினரின் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வந்தன. அதுமட்டுமல்லாமல் தனக்கு வாழ்க்கை கொடுத்த விளையாட்டுக்கு, திரும்ப கொடுக்கும் வகையில் இளம் வீரர்களுக்கு ரூ.50 லட்சத்தில் விடுதி ஒன்றை கட்டியுள்ளார் ரிங்கு சிங்.
அலிகர் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன் மசூதுஷ் ஜஃபர் அமினி என்ற பயிற்சியாளரிடம் ரிங்கு சிங் தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார். அன்றுமுதல் ரிங்கு சிங்கிற்கு அவரும் அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இப்போது அந்த பயிற்சியாளர் அலிகர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார். அந்த அகாடமிக்காக 15 ஏக்கர் நிலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் விடுதி ஒன்றை கட்டியுள்ளார் ரிங்கு சிங்.

அந்த விடுதியில் 14 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 4 வீரர்கள் தங்குவதற்கு திட்டமிட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. பொருளாதார சூழலில் பின் தங்கி இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ரிங்கு சிங் இதனை கட்டியுள்ளார். அனைவருக்கும் கேன்டீனில் உணவும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி கூடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ரிங்கு சிங் பேசுகையில், எனக்கு வாழ்க்கை கொடுத்த விளையாட்டிற்கு திருப்பி கொடுக்கும் விஷயமாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கிரிக்கெட் அகாடமி மூலம் கஷ்டப்படும் கிரிக்கெட் வீரர்கள் முன்னேறினால் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் மூலமாக பெரிய தொகை ஏலத்தில் வாங்கப்படவில்லை என்றாலும், நட்சத்திர வீரராக மாறுவதற்கு முன்பாகவே ரிங்கு சிங் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்காக உதவி செய்வது பலரிடம் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.