மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் 20 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டலான இன்னிங்ஸை ஆடியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, குர்னூர் ப்ரார் மற்றும் சிக்கந்தர் ராசா அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரை அறிமுக வீரர் குர்னூர் ப்ரார் வீசினார். அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, 2வது ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி கைல் மேயர்ஸ் ஒரு எச்சரிக்கையை கொடுத்தார்.
பின்னர் மீண்டும் குர்னூர் சிங் வீச, அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. கிடைத்த ஒரு ஃபிரீ ஹிட்டில் கைல் மேயர்ஸ் ஒரு இமாலய சிக்சரை விளாசி தள்ளினார். பின்னர் கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இன்னொரு பக்கம் கைல் மேயர்ஸ் சிக்சர்களாக பொளந்து கட்டினார். இதனால் 5வது ஓவரின் 2வது பந்திலேயே சிக்சர் அடித்து கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்தார். 20 பந்துகளில் கைல் மேயர்ஸ் அரைசதம் அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மேயர்ஸ் அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். ஆனால் தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற கைல் மேயர்ஸ், 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லக்னோ அணியின் கைல் மேயர்ஸ் அடித்த ஒவ்வொரு பந்தும் கிறிஸ் கெய்லை நினைவுபடுத்தியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆதிக்கம் ஐபிஎல் தொடரில் மீண்டும் கைல் மேயர்ஸ் மூலம் தொடரும் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.