அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாட உள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து வலிமை வாய்ந்த அணியான லக்னோ அணி களமிறங்க உள்ளது. குஜராத் அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபக்கம் லக்னோ அணி விளையாடியுள்ள 10 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை க்ருனால் பாண்டியா ஏற்றுள்ளார். இதனால் இன்றையப் போட்டியில் சகோதரர்களான ஹர்திக் பாண்டியா - க்ருனால் பாண்டியா மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் இல்லையென்றாகுல் கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, பூரன், ஸ்டாய்னிஸ், பதோனி என்று பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. அதேபோல் ரவி பிஷ்னாய், கவுதம், நவீன் உல் ஹக், ஆவேஷ் கான் என்று பந்துவீச்சும் சரியான கலவையில் இருக்கிறார்கள். இதனால் வலிமையான குஜராத் அணிக்கு லக்னோ நிச்சயம் சவாலளிக்கும்.
இன்னொரு பக்கம் குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசுர பலத்துடன் உள்ளது. பவர் பிளே ஓவர்களில் ஷமியை கடப்பதே பெரும்பாலான அணிகளுக்கு சவாலாக உள்ளது. இதனால் சொந்த மண்ணில் விளையாட உள்ள இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் குஜராத் அணி உள்ளது. இன்றையப் போட்டியில் லக்னோ அணி தோல்வியடையும் பட்சத்தில், அந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.