அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது கடைசி ஐபில் தொடரில் விளையாடுகிறார்.இதில் சாம்பியன் பட்டத்தை வென்று கௌரவமாக கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கில் தோனி உள்ளார். இந்த நிலையில் இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்ட தோனி தனது உடல் தகுதியையும் 28 வயது இளைஞர் போல் மாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் நான்கு முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி, நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோனி பங்கு பெறுவாரா என சந்தேகம் இருந்த நிலையில் தோனி 100% கண்டிப்பாக விளையாடுவார் என சிஎஸ்கேவின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தோனி ஒரு மகத்தான மைல்கல்லை எட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி தோனி இன்றைய ஆட்டத்தில் 22 ரன்கள் சேர்த்தால் ஐபிஎல் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார். தோனி ஏற்கனவே அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை வைத்திருக்கிறார்.
234 போட்டிகளில் விளையாடிய தோனி 4978 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் 22 ரன்கள் சேர்ப்பதன் மூலம் ஐந்தாயிரம் ரன்களை தொட்ட 7வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அவருக்கு சேரும். இந்த பட்டியலில் விராட் கோலி 6,624 ரன்கள் உடன் முதலிடத்திலும், தவான் 6244 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், டேவிட் வார்னர் 5,881 ரன்கள் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
ரோஹித் சர்மா 5,879 ரன்களுடன் நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 5,528 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்திலும் டிவில்லியர்ஸ் 5162 ரன்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.இதேபோன்று சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் 4687 ரன்கள் உடன் இருக்கிறார். அவருக்கு பின்னால் தோனி 4404 ரன்களுடன் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதனால், இந்த சீசனில் தோனி 283 ரன்கள் எடுத்தால் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.