லக்னோ: லக்னோவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், இனி லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பங்கேற்கவில்லை. இதனால் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை க்ருனால் பாண்டியா ஏற்றுள்ளார். சென்னை அணி சார்பாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்த நிலையில், 4வது ஓவரிலேயே மொயின் அலி ஆட்டத்தில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, லக்னோ அணியின் சரிவு தொடங்கியது. இதன் பின்னர் தீக்சனா ஓவரில் வோரா மற்றும் க்ருனால் பாண்டியா அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் ஜடேஜா பந்தில் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்க, லக்னோ அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் ஆயுஷ் பதோனியின் அபார ஆட்டத்தால் லக்னோ அணி மீண்டெழுந்தது. 31 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், லக்னோ அணியின் ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினார். இந்த நிலையில் லக்னோ 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை தொடர்ந்து வருவதால், சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லக்னோவில் காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இடியுடன் கூடிய கனமழை தொடங்கியது. இதனால் 7.28 மணி வரையில் மழை நிற்பதற்காக நடுவர்கள் காத்திருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கனமழை தொடர்ந்ததால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
