சென்னை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 2 இளம் வீரர்களை வாங்க பல்வேறு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய ரசிகர்களின் கவனம் ஐபிஎல் ஏலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக் மற்றும் ஐபிஎல் தொடர் இரண்டுக்கும் ஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க பணிகளை ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.26ஆம் தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அணிகளும் வீரர்களை டிரேட் செய்து மாற்ற முடியுமா என்று ஆலோசித்து முயன்று வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே லக்னோ அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ராஜஸ்தான் அணியின் தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கு டிரேட் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எந்தெந்த அணிகள் கண் வைத்துள்ளது என்று ரசிகர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ள 2 வீரர்களை கணித்துள்ளார். அந்த வீடியோவில், ரச்சின் ரவீந்திரா அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக 578 ரன்களை விளாசியுள்ளார்.

அதேபோல் இடதுகை ஆஃப் ஸ்பின்னராக இருக்கிறார். இவரால் 2 ஓவர்களை நிச்சயம் வீச முடியும். எந்த அணிக்கு இடது ஆஃப் ஸ்பின்னர் தேவைப்படுகிறார்களோ, அந்த அணி தீவிரமாக முயற்சிக்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த பட்டியலில் 2வதாக உள்ள வீரர் தென்னாப்பிரிக்கா அணியின் இளம் வீரரான ஜெரால்ட் கோட்சியே.
எளிதாக 145 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசக் கூடிய பவுலர் என்பதோடு, சில ஆக்ரோஷமான பவுன்சர்களை வீசக் கூடிய வீரர். அதேபோல் பேட்டிங்கிலும் நல்ல பவர் ஹிட்டராக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் வரும் ஐபிஎல் ஏலத்தில் இவர்கள் இருவருக்கும் நல்ல கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.