ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணி வெற்றிபெறுவதற்கு 215 என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் 95 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் விளாசினர்.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோ ரூட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக வழக்கம் போல் ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் பட்லர் நிதானம் காட்ட, தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால் பட்டாசாய் வெடித்தார். மார்கோ யான்சன் வீசிய 2வது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் சிக்சரை விளாசி மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால், 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் - பட்லர் கூட்டணி சேர்ந்தது. கடந்த சில போட்டிகளாகவே இருவருமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் இன்றாவது அணியை மீட்பார்களா என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இருவரும் ஆட்டத்தை மாற்றிக் காட்டினார்.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 74 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஐதராபாத் அணியின் பிரதான பந்துவீச்சாளரான மார்க்கண்டே வீசிய ஓவரில் சாம்சன் 2 சிக்சர்களையும், பட்லர் ஒரு சிக்சரையும் விளாசினர். இதன் காரணமாக 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 107 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பட்லர் 32 பந்துகளில் பட்லர் அரைசதம் கடக்க, பட்லரின் அதிரடி உச்சத்திற்கு மாறியது. இதன் பின்னர் இருவரும் ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரை விளாசி ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.
அதுமட்டுமல்லாமல் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது. 15 ஓவர்களுக்கு பின் ராஜஸ்தானின் அதிரடி மிரட்டலாக இருந்தது. 16வது ஓவரை வீசிய மார்க்கண்டே பந்துவீச்சில் 14 ரன்களையும், புவனேஷ்வர் குமார் வீசிய 17வது ஓவரில் 17 ரன்களையும் பட்லர் விளாசினார். பின்னர் நடராஜன் வீசிய 18வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதையடுத்து 19வது ஓவரில் பட்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரை வீச மீண்டும் நடராஜன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் சஞ்சு சாம்சன் அதிரடியால் இரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சாம்சன் 38 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.