”சென்னைக்கு பெரிய மிஸ் இந்த மனுஷன்” ஒரே சீசனில் 8 அரைசதம்.. 700 ரன்களுக்கு மேல் குவித்த டூ பிளஸிஸ்!
ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் அரைசதம் விளாசி ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் அசத்தியுள்ளார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் டூ பிளஸிஸ் அடிக்கும் 8வது அரைசதமாகும்.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கிளாஸினின் அதிரடியான சதம் காரணமாக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.

இதையடுத்து ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் பந்திலேயே விராட் கோலி அதிரடியை தொடங்கிய நிலையில், 4வது ஓவரில் டூ பிளஸிஸ் அதிரடியை தொடங்கினார். குறிப்பாக கார்த்திக் தியாகி வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசி தள்ளினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசப்பட்டது. இதன் காரணமாக பவர்பிளே ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 64 ரன்கள் சேர்த்தது.
இதனிடையே நிதிஷ் ரெட்டி வீசிய 9வது ஓவரில் டூ பிளஸிஸ் 41 ரன்களில் கொடுத்த கேட்ச்சை மயங்க் டாகர் அபாரமாக பிடித்து அசத்தினார். ஆனால் அது அந்த ஓவரின் 2வது பவுன்சர் என்பதால், நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் டூ பிளஸிஸ் அதிரடி உச்சத்திற்கு சென்றது. சிறப்பாக ஆடிய டூ பிளஸிஸ் 35 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் டூ பிளஸிஸ் அடிக்கும் 8வது அரைசதம் இதுவாகும்.
ஏற்கனவே நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டூ பிளஸிஸ் 700 ரன்களுக்கும் அதிகமாக விளாசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஆரஞ்ச் கேப்பை டூ பிளஸிஸ் நிச்சயம் வென்றுவிடுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சென்னை அணி டூ பிளஸிஸ்-ஐ தவறவிட்டுவிட்டதாக சிஎஸ்கே ரசிகர்களும் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications