பெங்களூரு: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு முதலே ஆர்சிபி அணி இந்த முன்னெடுப்பை செய்து வருகிறது. ஆனால் இதுவரை பச்சை நிற ஜெர்சியில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி, இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு பச்சை நிற ஜெர்சி அதிர்ஷ்டமில்லாத ஜெர்சியாகவே ரசிகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.
இன்றையப் போட்டியிலும் காயத்தில் இருந்து டூ பிளஸிஸ் முழுமையாக குணமடையாததால், விராட் கோலி கேப்டனாக களமிறங்கினார். இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி - டூ பிளஸிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் வழக்கம் போல் போல்ட் பந்துவீசினார்.
அவர் வீசிய முதல் பந்தே பிட்ச்சில் ஸ்விங்காக, விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறினார். முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்ட போது ஆர்ப்பரித்த சின்னசாமி மைதான ரசிகர்களின் கரகோஷம், முதல் பந்தின் முடிவிலேயே மொத்தமாக குறைந்தது. இது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் போல்ட் வீழ்த்தும் 100வது விக்கெட்டாகும். மேலும், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கோ க்ரீன் போட்டியிலும் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.