பெங்களூரு: கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான ஜெகதீசன் மற்றும் ஜேசன் ராய் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி ஆர்சிபி அணியின் இளம் வீரர் விஜய்குமார் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேகேஆர் அணி சார்பாக அதிரடி வீரர் ஜேசன் ராய் - ஜெகதீசன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

முதல் 2 ஓவர்களில் நிதானம் காட்டிய கொல்கத்தா அணி, 3வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கியது. ஜெகதீசன் விக்கெட் காப்பாற்ற நிதானம் காட்டினாலும், ஜேசன் ராய் கவலையின்றி விளாசி தள்ளினார். குறிப்பாக ஷாபாஸ் அஹ்மத் வீசிய கடைசி பவர் பிளே ஓவர்களில் அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்சர் உட்பட 4 சிக்சர்களை விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். ஏனென்றால் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால், கொல்கத்தா அணி எளிதாக 200 ரன்களை எட்டிவிடும் என்ற நிலை வந்தது. இதன் காரணமாக கேப்டன் விராட் கோலி ஹசரங்காவை உடனடியாக கொண்டு வந்து ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார். இதன்பின்னர் இளம் வீரர் விஜய்குமாரை பந்துவீச அழைத்தார். அந்த ஓவரிலும் பெரிதாக ரன்கள் சேர்க்கப்படவில்லை. பின்னர் ஹர்சல் படேல் வீசியும் விக்கெட் விழவில்லை.

இதனைத் தொடர்ந்து 10வது ஓவரை வீச மீண்டும் விஜய்குமார் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தில் ஜெகதீசன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, கடைசி பந்தில் ஜேசன் ராயையும் போல்ட் எடுத்து வீழ்த்தினார். 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஜேசன் ராய் வெளியேற, கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் எடுத்து சிக்கலில் சிக்கியது.
முதல் போட்டிக்கு பின் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விஜய்குமார், முக்கியமான போட்டியில் தேவையான நேரத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. சிறப்பாக பந்துவீசிய விஜய்குமாரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.