பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்று ஆர்சிபி மற்றும் மும்பை அணிக்கு இடையிலான லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்த நிலையில், ஆர்சிபி அணி வீரர்கள் டுபிளஸிஸ் தலைமையில் ஒரு அணியும் சுயாஷ் தலைமையிலான ஒரு அணியும் என தங்களுக்குள் மோதினர். சின்னசாமி மைதானம் எப்போதும் ரன் குவிப்புக்கு சாதமாக இருக்கும் என்பதால், பேட்ஸ்மேன்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் ரன் வேட்டையில் ஈடுபட்டார்கள்.

இதில் தொடக்க வீரராக கேப்டன் டுபிளஸிஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் விளையாடினர். இதில் டுபிளஸிஸ் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். 35 பந்துகளில் 47 ரன்கள் அடித்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். இதே போன்று டேவிட் வில்லி 11 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிராஸ்வெல் தான். ஆர்சிபியின் அனுபவம் இல்லாத இளம் விரர்களின் பந்துவீச்சை சிதறடித்தார். இதன் மூலம் 55 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இதில் 7 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் 20 ஓவர் முடிவில் டுபிளஸிஸ் அணி 215 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.

இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சுயாஷ் பிரபுதேசாய் தலைமையிலான அணியும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. சிராஜ், ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களின் பந்துவீச்சும் சிக்சருக்கு பறந்தது. காயம் காரணமாக விளையாட மாட்டா என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் பேட்ங்கில் அதிரடி காட்டினார்.
இதில் 46 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 78 ரன்கள் சேர்த்தார். இதில் மேக்ஸ்வெல் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடித்தார். லோமர் 48 ரன்களும், அனுஜ் 32 ரன்களும் எடுக்க சுயாஷ் அணி 20 ஓவர் முவில் 6 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் சிராஜ் 4 ஓவர்களில் 49 ரன்களை விளாசி 2 விக்கெட்டுகளையும், டோப்லி 4 ஓவரில் 32 ரன்களுக்கு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இதன் மூலம ஆர்சிபி அணியின் பேட்டிங் பலம் வாய்ந்தததாக உள்ளது தெரிகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் கோலி கலந்த கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.