கவுகாத்தி : ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சீசனில் ஆர் ஆர் அணி இறுதிப்போட்டி வரை சென்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இம்முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் அபாரமாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தது.
ஹைதராபாத் அணியை துவைத்த ராஜஸ்தான் அணி, இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்த ஆட்டத்தில் பில்டிங் செய்யும் போது அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் பட்லர் பேட்டிங் செய்யும்போது மூன்றாவது வீரராக களத்திற்கு வந்தார்.

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 11 பந்தில் 19 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் பட்லருக்கு ஒரு வாரம் ஓய்வு தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை டெல்லி அணியுடன் மோதும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இதேபோன்று புதன்கிழமை சிஎஸ்கே உடன் ராஜஸ்தான் மோதும் ஆட்டத்திலும் பட்லர் களமிறங்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் பட்லர் 17 போட்டிகள் விளையாடி 863 ரன்கள் விளாசினார். இதில் நான்கு சதமும் நான்கு அரை சதமும் அடங்கும். பட்லர் தற்போது செம பார்மில் இருப்பதால் ராஜஸ்தான் அணிக்கு பெரிய பலமாக கருதப்பட்டது.
தற்போது பட்லர் இல்லை என்றால் ராஜஸ்தான் தங்களுடைய யுத்தியை முற்றிலுமாக மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே அந்த அணியின் படிக்கல் ஃபார்மில் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால் நாளை ஆட்டத்தில் அவரும் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இதனால் கடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய துருவ் ஜுரல் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு இருக்கிறது.இல்லையெனில் கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபனிங் இறங்கக்கூடும். சென்னை போன்ற ஆடுகளத்தில் பட்லர் எளிதாக சிக்சர் அடிக்கக்கூடியவர். இதனால் அவர் இல்லாதது சிஎஸ்கேவுக்கும் டெல்லிக்கும் பெரும் நிம்மதியாக இருக்கும்.