லக்னோ : எப்படி சில தமிழ் படங்கள் முதல் பாதியில் போர் அடிக்கும் வகையில் எடுக்கப்பட்டு, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பாக செல்லுமோ, அந்த வகையில் இன்றைய லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் அமைந்தது.
டாஸ் வென்று முதலில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான் இல்லை. அவருக்கு பதிலாக சாம் கரண் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கினார். தொடக்க வீரர் கெயில் மெயர்ஸ் 29 ரன்களிலும், தீபக் ஹூடா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

குர்னல் பாண்டியா 18 ரன்கள், நிக்கோலஸ் பூரான் டக் அவுட், ஸ்டோனிஸ் 15 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 56 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சில் சாம் கரண் 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதர்வா டக் அவுட் ஆனார். இதே போன்று பிராப்சிம்ரன் சிங் 4 ரன்களில் யுத்விர் சிங் பந்துவீச்சில் வெளியேறினார்.
மேத்தீவ் ஷார்ட் மட்டும் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஹர்பிரத் சிங் துணையாக நின்று 22 ரன்களில் வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்து வெளியேற, களத்திற்கு வந்த ணிக்கந்தர் ராசா, தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலில் பொறுமையாகவும், பிறகு அதிரடியையும் காட்டினார்.

இதனால் பந்துக்கும், ரன்னுக்கும் இடையிலான தூரம் குறைந்தது. மறுபுறம் சாம் கரண், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியற, 41 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களில் ஷிக்கந்தர் ராசா வெளியேறினார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரியும் அடங்கும். கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட தமிழக வீரர் ஷாரூக்கான் சிக்சர் அடித்து, பஞ்சாப் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
மார்க் வுட் வீசிய 19 ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, தமிழக வீரர் ஷாரூக்கான், பஞ்சாப் அணியின் வெற்றியை பவுண்டரி அடித்து 3 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.