ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில், லக்னோ அணியும், சன்ரைசர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியின் முடிவு ஐபிஎல் புள்ளி பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால், அவர்களும் 10 புள்ளிக்கு சென்றுவிடுவார்கள்.

லக்னோ அணியை பொறுத்தவரை இன்று பெற போகும் 2 புள்ளிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . காரணம் இதன் மூலம் லக்னோ 13 புள்ளிகள் பெற்று, அவர்கள் முதல் 3 இடத்திற்கு சென்றுவிடுவார்கள். மேலும் கேஎல் ராகுல் இல்லாதது லக்னோ அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று கடைசியாக விளையாடிய 4 போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் வென்று மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

எப்போதும், மதிய நேரத்தில் முதலில் பேட் செய்யும் போது ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இதனால் இது ஐதராபாத்துக்கு சாதகமான டாசாக பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணியில் சன்வீர் சிங்கும், லக்னோ அணியில் யுத்வீர் சிங் மோஷின் கானுக்கு பதிலும், பிரேராக் மான்கட் தீபக் ஹூடாவுக்கு பதிலும் களமிறங்கி உள்ளனர்.