அகமதாபாத் : ஐபிஎல் தொடர் எப்போதுமே பல ஹீரோக்களை உருவாக்கி கொடுத்திருக்கிறது. சாதாரண வீரர்களாக களம் இறங்கி உலகப்புகழ் பெற்று அதன் பிறகு சர்வதேச போட்டிகளிலும் ஜொலித்து பலவீரர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசனிலும் அப்படிப்பட்ட ஒரு வீரர் தற்போது கிடைத்திருக்கிறார்.
கொல்கத்தா அணிக்காக விளையாடும் 25 வயதான ரிங்கு சிங் இன்று யாருமே எதிர்பாராத ஒரு சாதனையை படைத்துள்ளார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் கடைசி ஓவரில் தேவைப்பட்டபோது பேட்டிங் செய்த ரிங்கு சிங் கடைசி ஐந்து பந்துகளில் தொடர்ந்து 5 இமாலய சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

ஏழ்மையான குடும்பம் : இதனை அடுத்து யார் இந்த ரிங்கு சிங் என ரசிகர்கள் தேடி வருகிறார்கள். ரிங்கு சிங் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரிங்கு சிங், 2014 ஆம் ஆண்டு தொழில் முறை போட்டியில் அறிமுகமானார். ரிங்கு சிங் கூட பிறந்தவர்கள் ஐந்து பேர். இதில் இவர் 3வது பிள்ளை தான் ரிங்கு சிங். ரிங்குவின் தந்தை காஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்பவர்.
துப்புரவு பணியாளர் : அதன் மூலமே குடும்பத்தை காப்பாற்றும் நிலை இருந்ததால் இவர் சிறு வயதிலேயே துப்புரவு பணியாளராக வேலை செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் விளையாட்டு தான் கை கொடுக்கும் என நம்பி, அதன் பிறகு கடும் முயற்சிகளை எடுத்தார். இதன் பலனாக 16 வயதுக்குட்பட்ட உத்தரப்பிரதேச அணியில் இடம் பிடித்தார். தனது 16 வது வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி முதல் ஆட்டத்திலே 83 ரன்களை ரிங்கு சிங் விளாசினார்.
ரெய்னாவின் உதவி : ஆரம்ப காலத்தில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் ரிங்கு சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியிருக்கிறார். இடது கை பேட்ஸ்மேன் ரெய்னா போல் அதிரடியாக விளையாடுகிறார் என செய்திகள் பரவத் தொடங்கியதை அடுத்து 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி ரிங்கு சிங்கை வாங்கியது. அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு கே கே ஆர் அணி ரிங்கு சிங்கை 80 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

பிசிசிஐ தடை : நன்றாக சென்று கொண்டிருந்த ரிங்கு சிங்கின் வாழ்க்கையில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற டி20 தொடர் ஒன்றில் பிசிசிஐ யின் அனுமதி பெறாமல் ரிங்கு சிங் பங்கேற்றதால் அவருக்கு மூன்று மாதம் தடைவிதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது. இதனை அடுத்து ரிங்கு சிங் 2021 ஆம் ஆண்டில் முழங்காலில் காயம் ஏற்பட்டது.
சாதனை ஆட்டம் : இதனால் அந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் மீண்டும் 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 23 பந்தில் 42 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக வலம் வந்தார். தற்போது நடப்பு சீசனில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ரிங்கு சிங். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு மென்மேலும் வளர்ச்சியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.