ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்ட சாதனை.. மாபெரும் சிக்ஸர் ரெக்கார்டு படைப்பு
ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடர் இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களை எல்லாம் தூக்கி அடித்து பிரம்மாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே அதிவிரைவாக 300 சிக்ஸர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது 2024 ஐபிஎல் தொடர்.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 17 போட்டிகளே நடந்துள்ளன. அதற்குள் 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 259 சிக்ஸர்களே அடிக்கப்பட்டு இருந்தன. ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனை அப்போது படைக்கப்பட்டது. அந்த சாதனையை 2024 ஐபிஎல் தொடர் முறியடித்து இருக்கிறது.

2008 முதல் 2021 வரை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சராசரியாக 600 முதல் 700 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வந்தன. 2018இல் அதிகபட்சமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருந்தன. ஆனால், 2022 மற்றும் 2023இல் இந்த எண்ணிக்கை 1000த்தை கடந்தது. 2022இல் 1062 சிக்ஸர்களும், 2023இல் 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.
2024 ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளின் முடிவிலேயே 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு விட்டதால் மீதமுள்ள 53 லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் சுற்று, இறுதிப் போட்டிகளின் முடிவில் முந்தைய சிக்ஸர் சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடிக்கப்பட காரணமே இரண்டு போட்டிகள் தான். ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி. அந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 277 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 246 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 500 ரன்களை கடந்த போட்டி அதுதான். அந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்து இருந்தன.
அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 272 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி அப்போது 18 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 10 சிக்ஸர்கள் அடித்தது. இதுபோல அடுத்து வரும் போட்டிகளிலும் 200 ரன்களை கடந்து ஸ்கோர் அடிக்கப்பட்டால் அதிக சிக்ஸர்களும் அடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications