ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வி அடைந்தது.
இதற்கு முக்கிய காரணம் அஜின்க்யா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா படுநிதான ஆட்டம் ஆடுவது தான். மூன்றாம் வரிசையில் களமிறங்கி வரும் அஜின்க்யா ரஹானே முதல் விக்கெட் வீழ்ந்த உடனேயே களத்துக்கு வந்து விடுகிறார். கடந்த இரண்டு போட்டிகளிலும் பவர் பிளே ஓவர்களின் போதே வர களத்துக்கு வந்து விட்டார். ஆனாலும், நிதான ஆட்டம் ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்த விடாமல் செய்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 192 ரன்களை துரத்திய சிஎஸ்கே அணி 9 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது ரஹானே 20 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அடுத்த 11 ஓவர்களில் ஒவ்வொரு பந்துக்கும் 2 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலை வந்த பின்னரே ரஹானே வேகம் எடுத்தார்.
ஆனால், அதற்குள் இலக்கு எட்ட முடியாத நிலைக்கு சென்று விட்டது. ஆனால், அந்தப் போட்டியில் ரஹானே 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். அதைப் பார்க்கும் போது ரஹானே சிறப்பாக ஆடியதாகவே தோன்றும். அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரஹானே.
கடந்த இரண்டு போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவும் மோசமாகவே ஆடி இருக்கிறார். இந்த இரண்டு போட்டிகளில் 17 பந்துகளில் 21 ரன்களும், 23 பந்துகளில் 31 ரன்களும் தான் எடுத்து இருக்கிறார் ஜடேஜா. அதே போல டேரில் மிட்செல்லும் இந்திய ஆடுகளங்களை புரிந்து கொள்ள திணறி வருகிறார். அவர் விரைவில் அதிரடி ஆட்டத்துக்கு மாற வேண்டும். மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் எல்லாம் பவர் பிளே மற்றும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தில் வெளுத்து வாங்கி ரன் குவிக்கின்றனர். அதுவே அந்த அணிகளின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆனால், அந்த இடத்தில் தான் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. இந்த பிரச்சனை சிஎஸ்கே அணிக்கு புதிதும் கிடையாது. ஏற்கனவே, பல ஐபிஎல் தொடர்களில் இதே பிரச்சனையை சந்தித்து உள்ளது. குறிப்பாக பிளே-ஆஃப் சுற்றுக்கே முன்னேறாத 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணிக்கு பெரிய சிக்கலாக இருந்தது இதே ஸ்ட்ரைக் ரேட் தான். தற்போது ரஹானே, ஜடேஜாவால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.