மீண்டும் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா.. இம்முறை வீரராக அல்ல.. எந்த அணியுடன் இணைகிறார் தெரியுமா?
லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் ஐபிஎல் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக 205 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா இதுவரை 5,528 ரன்களை விளாசி இருக்கிறார். 2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் கழற்றவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, அதன்பின் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலின் கீழ் ரிங்கு சிங் இன்று உச்சத்தில் இருக்கிறார். அதேபோல் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமீர் ரிஸ்வியையும் அடையாளம் காட்டியது சுரேஷ் ரெய்னா தான்.
இதனால் சுரேஷ் ரெய்னா விரைவில் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், இப்போது கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகர் பதவி காலியாக உள்ளது.
இதனிடையே உத்தரப் பிரதேச வீரர்களுக்கு உதவிகளை செய்து வரும் சுரேஷ் ரெய்னாவை ஆலோசகராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவை நியமிக்கும் பட்சத்தில் உள்ளூர் ரசிகர்களையும் கனெக்ட் செய்ய முடியும் என்று அணி நிர்வாகம் ஆலோசித்துள்ளது. இதனிடையே ரசிகர் ஒருவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
அதன் கீழ் பத்திரிகையாளர் ஒருவர், போலியான செய்தி என்று கருத்து பதிவிட்டார். ஆனால் பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா, அனைத்து நேரங்களிலும் உங்களின் செய்தி சரியாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார். இதனால் லக்னோ அணியின் ஆலோசகராக சுரேஷ் ரெய்னா அணுகப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளது.
Story first published: Sunday, December 24, 2023, 16:56 [IST]
Other articles published on Dec 24, 2023


Click it and Unblock the Notifications