மும்பை : ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் கிடைக்க வேண்டும், பயிற்சியாளராக பணியாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் இந்திய வீரர்களை புகழ்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மட்டும் ரூ.68.05 கோடி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளின் பயிற்சியாளராகவும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது டேவிட் வார்னர் இந்திய ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பல்வேறு விஷயங்களை பகிர்வது வழக்கமாகிவிட்டது.

அதேபோல் ஆஸ்திரேலியா மீடியாக்கள் இந்திய வீரர்களை பற்றி காட்டமாக விமர்சிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களை பெருமையாக பேச தொடங்கியுள்ளார்கள் ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையை கூட அளிக்க மாட்டார்கள்.
2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமண்ட்ஸை குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அப்போது ஹர்பஜன் சிங் மீது உடனடி விசாரணை வைக்கப்பட்டு சர்ச்சையாகியது. இதன் காரணமாகவே 2008ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் யாருக்கும் அதிக தொகை கொடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.
ராஜஸ்தான் கேப்டனாக செயல்பட்ட ஷேன் வார்னே அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசுகையில், ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வீரர்கள் யாரும் இந்திய வீரர்களிடம் பெரிதாக பேசியது கூட கிடையாது. ஆனால் 2008க்கு பின் களமே மாறிவிட்டது.
சோசியல் மீடியாவில் இந்திய வீரர்களை பற்றி புகழ தொடங்கிவிட்டார்கள். விராட் கோலி, தோனி, ரோகித் சர்மாவை பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே பேசி வருகிறார்கள். இதற்கு ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு கிடைக்கும் பணிகளே காரணமாக அமைந்துள்ளது. பணத்தின் உண்மையான அதிகாரம், ஆஸ்திரேலியா வீரர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்தி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.