மும்பை : ஐபிஎல் அணிகளின் சொத்து மதிப்பு பட்டியலை பிராண்ட் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அதிக ரசிகர்களை கொண்ட வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் எதிரி அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமே 50 கோடி என்ற அளவுக்கு உள்ளது. இந்தப் பட்டியலில் சில சுவாரசியமான விஷயங்களும் இருந்தன.

ஐபிஎல் தொடரின் பிராண்ட் மற்றும் சொத்து மதிப்பு சுமார் 89,000 கோடியாக உயர்ந்து இருப்பதாக இந்த நிறுவனம் கூறி உள்ளது. அதே போல. 10 ஐபிஎல் அணிகளின் சொத்து மதிப்பும் கூட உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு சராசரியாக 500 - 600 கோடி அளவுக்கு இருந்த இருந்த முன்னணி அணிகளின் சொத்து மதிப்பு அசுர வளர்ச்சியை சந்தித்து இருக்கிறது.
2023 ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே அணியின் சொத்து மதிப்பு 673 கோடியாக உள்ளது. சிஎஸ்கே அணியின் எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் சொத்து மதிப்பு 723 கோடியாக உள்ளது. இத்தனைக்கும் கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை. இறுதிப் போட்டிக்கு கூட முன்னேறவில்லை.
மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. அந்த அணியின் சொத்து மதிப்பு 653 கோடியாக உள்ளது. அந்த அணியும் ஐபிஎல் கோப்பை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், கொல்கத்தா அணிக்கு நிலையான ரசிகர் கூட்டம் இருப்பதால் அதன் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.
நான்காவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பையே வெல்லாத அந்த அணியின் சொத்து மதிப்பு 580 கோடியாக உள்ளது. ஐந்தாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. 2022 தான் குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனது. இரண்டே ஆண்டுகளில் இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு ஐபிஎல் கோப்பை வென்ற அந்த அணி அசுர வளர்ச்சி கண்டு 543 சொத்து மதிப்பு கொண்டுள்ளது.
அடுத்த ஐந்து இடங்களில் டெல்லி கேபிடல்ஸ் (532 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (519 கோடி), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (400 கோடி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (390 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (376 கோடி) உள்ளன. இந்தப் பட்டியலில் 2022இல் அறிமுகம் ஆன லக்னோ அணியை விட 2007 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.