"மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் என தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயரை வைத்துக் கொண்டு அந்த ஐபிஎல் அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உண்டு.
ஆனால், தற்போது அதை விட ஒரு படி மேலே போய் மொத்தமாக மும்பை அணியாக மாறி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஒய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அவர் செல்லும் போது சிஎஸ்கே அணியை மும்பை அணியாக மாற்றி விட்டு செல்கிறாரோ? என்ற கேள்வி எழுகிறது.

2008 ஐபிஎல் தொடங்கியது முதல் சில ஆண்டுகள் வரை சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்றனர். அஸ்வின், லக்ஷ்மிபதி பாலாஜி, பத்ரிநாத், நாராயணன் ஜெகதீசன் என சில வீரர்கள் அவ்வப்போது இடம் பெற்று வந்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு தமிழக வீரர் கூட சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை.
மாறாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றனர். 2022 ஐபிஎல் ஏலத்தில் தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. அதற்கு முன்பே சிஎஸ்கே அணியின் மும்பைவை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்று இருந்தார். அவரே தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் ஆகி இருக்கிறார்.
அவரையும் சேர்த்து எட்டு மும்பை வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று உள்ளனர். அவர்களில் முக்கியமான நான்கு வீரர்கள் தற்போது போட்டிகளிலும் ஆடி வருகிறார்கள். அந்த நான்கு வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், அஜின்க்யா ரஹானே, சிவம் துபே மற்றும் ஷர்துல் தாக்குர்
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள மும்பை அணி வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், அஜின்க்யா ரஹானே, சிவம் துபே, ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, ராஜவர்தன், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி
இவர்கள் அனைவரும் திறமையின் அடிப்படையில் தான் சிஎஸ்கே அணி தேர்வு செய்து இருக்கும் என எடுத்துக் கொண்டாலும், சென்னை என்ற பெயரில் அணியை வைத்துக் கொண்டு அதில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாதது தான் நமது ஆதங்கம். அடுத்து 2024 ஐபிஎல் தொடரிலாவது சில தமிழக வீரர்களை சிஎஸ்கே அணி தங்கள் அணிக்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் திறமையான கிரிக்கெட் வீரர்களே இல்லை என சிஎஸ்கே நிர்வாகம் கூறுவதாகவே நாம் கருத முடியும்.
சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இல்லாத நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நான்கு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விஜய் ஷங்கர், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர் மற்றும் ஷாரூக் கான் என நான்கு தமிழக வீரர்களை அந்த அணி ஆட வைத்து வருகிறது. இந்த நால்வருமே குஜராத் அணிக்காக 2024 ஐபிஎல் தொடரில் போட்டிகளில் ஆடி வருகின்றனர். அதிலும் சாய் சுதர்ஷன், விஜய் ஷங்கர் அனைத்து போட்டிகளிலும் இடம் பெற்று வருகின்றனர். ஏன் இவர்களில் ஒருவரை கூட சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கவில்லை? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.
Story first published: Friday, April 19, 2024, 11:08 [IST]
Other articles published on Apr 19, 2024


Click it and Unblock the Notifications