IPL 2024 : CSK-வுக்கு கும்பிடு போட்ட பென் ஸ்டோக்ஸ்.. ஐபிஎல்-இல் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணிக்கு தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தங்களிடம் தெரிவித்ததாகவும், அதற்கு காரணம் என்ன என்பதையும் விளக்கி உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், பின்னர் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்து ஆடினார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்காக ஆட உள்ளார்.
பின்னர் பிப்ரவரி - மார்ச் மாதம் இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க உள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
அந்த சூழலில், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றால் தொடர்ந்து நான்கு - ஐந்து மாதங்கள் தீவிரமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டி வரும். எனவே, இடையே வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்-க்கு கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்காமல் போயிருந்தால் அவர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அந்த சிகிச்சையை தள்ளிப் பொட்டு இருக்கிறார். அவரால் நீண்ட பந்து வீசவும் முடியாத நிலை உள்ளது.
சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பென் ஸ்டோக்ஸ் தங்களிடம் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார் என தெரிவித்துள்ளது. மேலும், அவர் 2023 உலகக்கோப்பை தொடரில் ஆடியது, அடுத்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டிய சூழ்நிலைகளை புரிந்து கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகலுக்கு தாங்கள் உறுதுணையாக இருப்போம் என சிஎஸ்கே அணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி உள்ளது.
கடந்த 2023 ஐபிஎல் தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்று 15 ரன்கள் மட்டுமே அடித்தார். பந்துவீச்சாளராகவும் அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். சிஎஸ்கே அணியில் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் பென் ஸ்டோக்ஸ் விலகுகிறாரா? என்ற கோணத்திலும் ரசிகர்கள் அவரது விலகல் குறித்து பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications