சிஎஸ்கே-வுக்கு அடித்த ஜாக்பாட்.. 2 புதிய ஆல் - ரவுண்டர்கள்.. ஐபிஎல்-க்கு முன் திடீரென நடந்த ட்விஸ்ட்
சென்னை : 2024 ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அந்த அணியின் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் ரஞ்சி ட்ராபி தொடரில் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர்.
அதன் காரணமாக அவர்களை பின் வரிசை ஆல் - ரவுண்டர்களாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு வீரர்கள் துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்குர். இவர்களில் துஷார் இதுவரை பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. ஆனால், 11வது வரிசையில் பேட்டிங் இறங்கிய அவர் ரஞ்சி ட்ராபி காலிறுதிப் போட்டியில் சதம் அடித்தார்.

அடுத்து ரஞ்சி ட்ராபி அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்து இருக்கிறார் ஷர்துல் தாக்குர். அவர் 105 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இருவருமே ரஞ்சி ட்ராபி டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடி சதம் அடித்து தங்களின் பேட்டிங்கை நிரூபித்து இருக்கின்றனர்.
இதை அடுத்து சிஎஸ்கே அணியில் அவர்களை பிளேயிங் 11-இல் தேர்வு செய்தால் அது பேட்டிங் வரிசைக்கு அதிக பலம் கொடுக்கும். எனவே, வேகப் பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்குர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணியில் முக்கிய இடத்தை பெற வாய்ப்பு உள்ளது.
இதுவரை சிஎஸ்கே அணிக்கு ஆல் - ரவுண்டர்களை தேர்வு செய்வதில் பெரிய குழப்பம் இருக்கும். யாராவது ஒருவரை தேர்வு செய்தால் மற்றொருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக இது வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்துவதில் சிக்கலை உண்டாக்கும். ஆனால், இந்த முறை இவர்கள் இருவரும் பேட்டிங்கில் கை கொடுத்து இருப்பதால் சிஎஸ்கே அணி கூடுதல் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்களை களமிறக்கலாம்.
ஷர்துல் தாக்குர் பிளேயிங் 11இல் நிச்சயம் இடம் பெறுவார் என ஏற்கனவே பலரும் கணித்து இருக்கின்றனர். ஒரு வேளை தீபக் சாஹர் ஃபார்ம் சரியில்லை என்றாலோ, காயம் ஏற்பட்டாலோ, துஷார் தேஷ்பாண்டே அவருக்கு மாற்றாக அணியில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications