விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார். தோனி போன்ற மிகப் பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்புவது என்பது மிகப்பெரிய சவாலான காரியம்.
இதனால் ருதுராஜ் மிகப்பெரிய நெருக்கடியும் பொறுப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கூடுதல் பொறுப்பு அவருடைய பேட்டிங்கை பாதிக்க செய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கேப்டன்ஷிப் பொறுத்தவரை தோனியின் மேற்பார்வையில் சிறப்பாகவே பணியாற்றி வருகிறார்.

ஆனால் அவருடைய பேட்டிங் கொஞ்சம் தடுமாற்றத்தை கண்டு இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக விளையாடிய போது மூன்று பவுண்டரிகளை அடித்து அதிரடி காட்டினாலும் 15 ரன்களில் அவர் வெளியேறினார். இதேபோன்று ருதுராஜ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்னுடைய இயல்பான அதிரடியை வெளிப்படுத்தினார்.
36 பந்துகளை எதிர்கொண்டு 46 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். எனினும் ருதுராஜ் ஸ்ட்ரைக் ரேட் 127 என்ற அளவில் இருந்தது. அவர் எப்போதுமே 140க்கு மேல் அடித்தால் அது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான சிஎஸ்கே அணி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் விசாகப்பட்டினத்தில் விளையாடியது.
சிஎஸ்கே அணி 192 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. அப்போது ருதுராஜ் கவன குறைவு காரணமாக தேவையில்லாமல் ஒரு ஷார்ட் ஆடி தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார். பந்தை டிரைவ் செய்கிறேன் என ருதுராஜ் முயற்சி செய்து, அது பந்து பேட்டில் பட்டு கீப்பிங் கேட்ச் ஆனது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இதேபோன்று ரச்சின் ரவீந்திராவும் அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் பந்துகளை வீணடித்தார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு ரன்களை மட்டுமே சேர்த்தார். தாம் பந்தை வீணடிக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட அவர் தூக்கி அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார். கடந்து இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் தொடக்க ஜோடியின் ஆட்டம் தான். ஆர் சி பிக்கு எதிராக மூன்று புள்ளி ஆறு ஓவரில் எல்லாம் முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சிஎஸ்கே சேர்த்தது.
இதேபோன்று குஜராத் அணிக்கு எதிராக 5.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஆனால் இன்று சிஎஸ்கே அணி மூன்று ரன்களில் எல்லாம் முதல் விக்கெட்டையும், ஏழு ரன்களில் எல்லாம் இரண்டாவது விக்கெட்டையும் இழந்து தடுமாறியது. இந்த ஆட்டத்தில் பவர் பிளேவில் சிஎஸ்கே அணி ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.