சென்னை : ஐபிஎல் தொடரின் ஃபேர்பிளே விருதை 2015ஆம் ஆண்டுக்கு பின் ஒருமுறைகூட சிஎஸ்கே அணி வாங்க முடியாமல் தவித்து வருகிறது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த போது தோனி பேசுகையில், ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்கிறோமோ இல்லையோ.. ஃபேர்பிளே விருதை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று கூறுவார். 2 ஆண்டுகள் தடைக்கு பின் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்த போதும், தோனி இதே வார்த்தைகளை கூறியிருந்தார்.

இதனால் ஃபேர்பிளே பட்டியலில் சிஎஸ்கே அணி எப்போதும் முன்னிலையிலேயே இருக்கும். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை 6 முறை சிஎஸ்கே அணி ஃபேர்பிளே விருதை கைப்பற்றியது. தற்போது இந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு ஃபேர்பிளே விருது வழங்கப்பட்டுள்ளது. 17 போட்டிகளில் விளையாடிய ஐதராபாத் அணி 173 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.
அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 142 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 140 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது. ஃபேர்பிளே விருதில் சிஎஸ்கே அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு ஜடேஜாவின் செயல்பாடே காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்த குற்றச்சாட்டுக்கு ஜடேஜா ஆளானார். அதேபோல் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் மீண்டும் அதே தவறை செய்ய, சஞ்சு சாம்சன் நடுவரிடம் முறையிட்டு வெளியேறினார். இதனால் ஜடேஜாவின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி சூதாட்ட புகாருக்கு உள்ளாகி 2 ஆண்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன், மொத்தமாக 6 முறை ஃபேர்பிளே விருதை வென்றுள்ளது. ஆனால் 2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த சிஎஸ்கே அணி, அடுத்த 7 சீசன்களில் ஒருமுறை கூட ஃபேர்பிளே விருதை வெல்லா முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.